Saturday, 24 January 2015

பிசாசு

 ஒரு இயக்குனரின் வீச்சு படத்தின் வேர்வரை ஊடுருவுதல் என்பது நல்லதாகவோ அல்லது மொக்கையாகவோ முடிந்துவிடலாம்.உதாரணமாக டி.ஆர் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் டி.ஆர் போலவே பேசுவது, பார்த்திபன் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பார்த்திபன் போலவே வார்த்தைஜாலம்(பெரும்பாலும் இது மிகையாகி 'போதும்டா சாமி' என்று பார்வையாளனை தினறடிப்பதாகவே இருந்துள்ளது.உதாரணம் கதை,திரைக்கதை,வ,இ...படம்).

                  மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு புத்தகம் பற்றியோ உலக சினிமா பற்றியோ(யுத்தம் செய்'ல் சேரன் ராஷமன் படம் பற்றி பேசுதல்,இதே படத்தில் எக்ஸ்சார்சிஸ்ட் படம் பற்றிய காட்சிகள்) பேசிக்கொள்வது,தத்துவம் பேசும் கதாபாத்திரம்(இப்படத்தில் பணம் ஏய்க்கும் அந்த இளைஞன்)அல்லது காட்சிகளூடே ஒரு புத்தகத்தை காட்டுதல்(யுத்தம் செய்) இவைகளை ஒலக விமர்சகர்கள் கடுமையாக விமர்சிப்பதை காணமுடிகிறது."சாமானியர்கள் இப்படியா பேசிக்கொள்வார்கள்?" என்று கேட்கிறார்கள்.என்னைப்பொறுத்தளவில் இது ஒரு குறையாக தெரிந்ததில்லை.காரணம் இயல்பு மனிதன் விவாதிப்பதெல்லாம் அடுத்தவன் வூட்டு சுவத்துக்கு அப்பால் என்ன நடக்குது?/டாஸ்மாக் பற்றி/நிஜவாழ்வை விட பன்மடங்கு ஊதி பெருக்கப்பட்ட ஒரு நடிகனின் இமேஜ் பற்றி/நடிகனின் அரசியல் பிரவேசம் பற்றி...blah..blah...ஸ்ஸப்பா...இந்த கருமத்தைத்தானே தினம் நாம் வாழ்வில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்?அதேநேரத்தில் படத்தில் வருவது போன்ற மனிதர்களே நிஜவாழ்வில் இல்லை என்று சொல்லமுடியாது அல்லவா!
                     ஒரு நல்லவன்/ள் இறந்தால் அவன்/ள்(அது?) பிசாசாக அலைந்தாலும் நல்ல தன்மையக்கொண்டதாகவே இருக்கும் என்பதே கரு.உடனே பிசாசுக்கு சிந்திக்க தெரியுமா?என்று கேட்கிறார்கள்.இவர்கள்தான் ஆங்கில பேய் படங்களை எதிர்கேள்வி கேட்காமல் பார்த்தவர்கள்.சரி படத்துக்கு வருவோம்.
                    படத்தின் குறைகளை முதலில் பார்ப்போம்.
       மிஷ்கின் படமென்றாலே அனைத்து(அல்லது பிரதான கேரக்டர் வரையிலாவது) abrupt ஆக ஜெர்க் அடிப்பது,விழிக்காமல் இமைப்பது,தலைகுனிந்து நிற்பது(இது குரசோவா பாணி) ,ஒருத்தனை லைன் கட்டி ஒவ்வொருத்தராக வந்து அடிப்பது போன்றவைகளைக்கூறலாம்(இசை பற்றி பிறகு பார்ப்போம்).Autuer என்ற சொல்லாடல்படி மேற்சொன்னவை மிஷ்கினின் முத்திரையை பறைசாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் சில சமயங்களில் அது மிகையாகிப்போவதை காணமுடிகிறது.
         உதாரணமாக சுரங்கப்பாதையில் அந்தச்சிறுமி(அட்டகாசமான கண்டுபிடிப்பு!) பார்வையற்றவர்களை அழைத்துச்செளும் காட்சியில் எல்லாரும் லைனில் நின்றுவிட்டு ஏதோ ஒரு cue க்காக காத்திருந்து பிறகு நகர்வதாக வரும் காட்சி.அக்காட்சி துவங்கும்போதே அவர்கள் நகர்வதாக காட்டக்கூடாதா?(எனக்கு சினிமா கோட்பாடுகள் தெரியாது.எனக்கு தோன்றியதை கேட்கிறேன்).

          பிரதான கதாபாத்திரத்தின் பெயர் ஒற்றைக்கண் சிவராசனா?என்று கேட்க தோன்றுகிறது.சரி மாடர்ன் யூத்துங்க எந்த ஸ்டைலை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அதை தவிர்த்துவிடலாம்.
         விளிம்புநிலை மக்களின் வாழ்வை படமாக்குதல் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் "இந்தப்படத்தில் இந்தந்த காட்சிகளில் அவர்கள் இடம்பெறுவார்கள்" என்று வலிந்து திணிப்பது அவர்களுக்கு செய்யும் நியாயமாக இருக்காது.இந்தப்படத்திலேயே அந்தச்சிறுமி&பார்வையற்ற நபர்கள் மிஷிகினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நினைவுபடுத்துகிறார்கள்.சப்வேயில் சித்தார்த்தை பீர் பாட்டிலால் கொலைசெய்யவரும் அந்த நபர் பிசாசால் கொலை செய்யப்படுவதற்காக மட்டுமே அந்த சப்வே காட்சிகள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

       மற்றொரு குறை ராதாரவி.அவர் நல்ல நடிகர் என்றாலும் பல காட்சிகளில் ஏதோ ஒட்டாமல் நடித்தது போலவே எனக்கு தோன்றியது.அவரைவிட சித்தார்த்தாக நடித்த நாகா நன்றாக பொருந்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
          இப்போது இசை பற்றி.ஒரு பாடலை/பின்னணி  இசைத்துணுக்கை கேட்கும்போதே இன்னார்தான் இசையமைத்தது என்று சொல்லிவிடலாம்(தற்காலத்தில் லூப்பில் போடுபவர்களை சொல்லல).ஆனால் இவர்  படத்தின் இசையக்கேட்டால் "இது மிஷ்கின் பட இசை" என்று சொல்லுமளவு அவர் எந்த இசையமைப்பாளருடன் பணியாற்றினாலும் தனது பாணி என்ற ஒன்றில் பொருந்துவதாக இருக்குமாறு சரியாக வேலை வாங்குகிறார்.கண்டிப்பாக இதை பாராட்ட வேண்டும்.குறிப்பாக அவர் படங்களில் வயலின்(எனதபிமான இசைக்கருவி) பிரதானமான ஒன்றாகவே இருந்துவந்துள்ளது(அஞ்சாதே துவங்கி).அது இசையராஜாவாக இருந்தாலும் கே'யாக இருந்தாலும் அரோல் கொரேலியாக இருந்தாலும் தன்  மனதில் தோன்றும் பாணியில் அவர்களை இசையமைக்க வைக்கிறார்.பிரதானமாக Bach'ன் பாணி?(என்று எனக்கு தோன்றுகிறது.தவறிருந்தால் மன்னிக்கவும்).அந்த சப்வேயில் வரும் பாடல், அந்த வயலின் நிரவலிசை, பாடிய அந்த பாடகியின் குரல்(என்ன ஒரு உணர்வு!),அதற்கு வாயசைக்கும் சிறுமி நான்கும்  அட்டகாசமாய் ஒரு புள்ளியில் சேர்வதை உணரமுடிந்தது.உயிரை உருக்கும் அப்பாடல்:

           பேயோட்டும் பெண் சம்மந்தப்பட்ட காட்சிகள் இழையோடும் நகைச்சுவை.  பேயோட்ட வெவ்வேறு மதத்தினர் வந்து சடங்குகள் செய்வதை ஒருவித பகடியாகவே காட்டியது நமட்டுச்சிரிப்பை வரவழைக்கிறது.  சவரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் இடையில் எழுந்துவந்தாலும் முழுச்சவரம் செய்த முகத்தோடவே இருக்கும் வழமைக்கு மாறாக பாதி தாடியோடு அவர் வந்தது நல்ல கண்டின்யூவிட்டி.நிறக்குருடு என்ற ஒரு புது விஷயத்தை மகா திருப்பத்தை  கொண்டுவர பயன்படுத்திதை பாராட்டலாம்.நாயகியின் தொப்புள்+மார்பகங்கள் நிலையான செட் பிராபர்டியாக இருக்கும் தமிழ் சினிமாவில் வெறும் பத்து நிமிடத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணை பயன்படுத்தியது புதுமை.
.
பி.கு: படங்களைப்பற்றி நான் எழுதுவதை விமர்சனம் என்று நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்.படம் பார்க்கும்போது தோன்றும் எண்ண ஓட்டங்களைப்பதிவு செய்வதே என் வழக்கம்.அந்த வகையிலேயே இதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சீன்ல திரைக்கதை செம வீக்கா இருப்பது உன் கண்ணுக்கு தெரியலியா?ஒளிப்பதிவு எட்டாவது சீனில் துருத்திக்கொண்டிருந்ததே?அது உனக்கு தெரியலியா என்றெல்லாம் அக்கப்போர் செய்யப்படாது.ஏன்னா அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது!
         

No comments:

Post a Comment