Tuesday 13 June 2017

ஆளவந்தான் (2001)


 முன்பு ராமன் ராகவ் பற்றிய பதிவில் குறிப்பிட்டதை மேற்கோளுடன் துவக்கலாம்.
ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

படம் ஆகா!என்றோ சூரமொக்கை என்றோ பைனரியில் மேம்போக்காக கடந்துபோக விரும்பவில்லை.படம் பற்றிய எனது கருத்துக்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்!pros and cons என்றெல்லாம் தனித்தனியாக பத்தாப்பு பிள்ளை எக்ஸாம் எழுதுவதுபோல எழுதாமல் random ஆக சில விஷயங்கள்.
.
ஆளவந்தான் படம் பற்றிய விளம்பரங்களை மறக்க முடியாது!அப்போதெல்லாம் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வெப்சைட் உருவாக்குவார்கள்.படம் வெளிவந்தும் ஒரு நான்கைந்து மாதங்கள் உயிரோடு இருக்கும்.பிறகு டொமைன் நேமுக்கு காசு கட்டாமல் விட்டுவிடுவார்கள்.அதுபோல நான் பார்த்தது ஏப்ரல் 2001 ல்.சைட் dark theme பின்னணியில் Cast&Crew,Synopsis என்றெல்லாம் தமிழ் சினிமா கண்டிராத புதுப்புது வார்த்தைகளை அதில் காண முடிந்தது!

         பரபரப்பாக பேசப்பட்ட(!!??) கமல் நிர்வாணமாக இருக்கும் போட்டோ ,ரியாஸ் கான் இருண்ட பின்னணியில் எடுக்கப்பட்ட போட்டோ என்று அப்போது வந்த மற்ற படங்களின் வெப்சைட்டுகளை காட்டிலும் முற்றிலும் வேறாக இது இருந்தது.(சமகால ரிஷிtheமூவி.காம் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை :D )

        பிறகு டிரைலர்!டிரைலரின் பின்னணியில் கமல் அமெரிக்கன் ஆங்கில  அக்சென்டில் deep bass  ல் வாய்ஸ் ஓவர் போல பேசியிருந்தார்!உண்மையிலேயே மிரட்டலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது!இப்போது அந்தமாதிரி பாணி என்பது தேய்வழக்காகி போய்விட்டதையும் சொல்லவேண்டும்(குறிப்பாக இங்குலீஸ் பண்டிட்டு கவுதம் மேனன் அதை தேவைக்கும் அதிகமாய் பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார்).
        விஜய் கேரகடருக்காக கமல் ராணுவத்தில் பயிற்சி பெற்ற வீடியோவெல்லாம் வந்தது!"அடியாத்தீ என் மகன் என்னமா நடிச்சிருக்கான்" என்று உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டார் காந்திமதி.
         அப்புறம்  விஜயும் நந்துவும் arm wrestle பண்ணும் அந்த அதகள ஸ்டில் பெரிய்ய்ய பேனராக மவுன்ட் ரோடில் வைத்திருந்தார்கள்!அருகில் பார்த்தாலே பரவசம் பேனர் பரிதாமாக தெரிந்ததையும் சொல்லவேண்டும்!

         காஷ்மீர் காட்சிகளை இங்கேயே செயற்கை  செட் போட்டு பனியின் பின்னணியில் காட்சி எடுத்ததாக பரப்பரப்பான பேச்சிருந்தது(ஒப்பனிங் காட்சி).25 கோடி செலவானதாக அங்கலாய்த்தார்கள்.ஆனால் 1997 ல் வந்த ரட்சகனுக்கே அவ்வளவு செலவானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
         இப்ப ஆளவந்தான் படம் என்பதே முழுக்கமுழுக்க நந்து கேரக்டரை சுற்றியே பின்னப்பட்டது. குணா பட குணாவுக்கும் நந்துவுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் பெண்!வேற்றுமை என்று பார்த்தால் அதே பெண்!
        குணாவுக்கு அபிராமி வேண்டும்!அபிராமி வந்தால் எல்லாம் மாறிடும்!உலகமே utopia வாகிவிடும்!நந்துவுக்கு உலகில் உள்ள பெண்கள் எல்லாருமே அவன் சித்தியை நினைவுபடுத்துபவர்கள்(தாய் தவிர்த்து).அவர்களை கொல்வதே உலகை காக்கும் அல்லது குறிப்பாக  தனது சகோதரனை காக்கும்  வழி.பெண்களை (misogynist) அடியோடு வெறுப்பவன்.

         நந்து நெனச்சிருந்தா கவிஞனாகவோ விஞ்ஞானியாவோ வந்திருக்கலாம் என்று டாக்டர் சொல்வதாக காட்சி வரும்.முன்பு குறிப்பிட்டது போல அவன் சிறுவயது குரூரங்களிளிருந்து வெளியே வந்திருக்கலாம்!அவன் வெளியே வர விரும்பவில்லை!தன்னைத்தானே victimise  செய்துகொண்டான்.

       அப்படி தன்னை பாதிகப்பட்டவனாகவே காட்டிக்கொள்வதன் மூலம் தனது சகோதரனுக்கு தன தியாகத்தின் தீவிரத்தை விளங்கவைத்துக்கொண்டே இருக்கமுடியும் என நம்புகிறான்.
          குணா உள்ளூர ஒரு பயணம் என்றால் ஆளவந்தான் வெளிநோக்கிய பயணமாக கொள்ளலாம்.இதில்ஒருபிரச்சனை.உளவியல் ரீதியாக நந்துவை சுற்றியே கதையை நகர்த்தாமல் படத்தைதிசைமாற்றியது!கமல் படமாக கொண்டுபோகாமல் நடுவில் ரசினி படமாக்க முயன்றது.உதாரணமாக நந்து என்பீல்ட் பைக் துவங்கி லாரி வரை சகஜமாக ஓட்டுவது,சாகசங்கள் செய்வது,மேலே பறந்துகொண்டிருக்கும்(Gold winner)பலூனில் பறந்துபோய் விழுவது(இதேமாதிரி காட்சியை லிங்கா படத்தில் ரசினிக்கு வைத்தபோதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன) இதுமாதிரி திசை திருப்பியது எடுபடவில்லை என்றே சொல்லவேண்டும்!

         அதென்ன ரசினி படம்?அப்போ கமல் படம் என்று சொல்வதற்கான காட்சிகள் உண்டா? என்று கேட்டால் உண்டு!மனீஷாவுடன் நந்து உரையாடும் அந்த ஹோட்டல் அறை காட்சியை சொல்லலாம்!கிளுகிளுப்பாக ஆரம்பித்து மனீஷா திறந்த பாத்ரூமில் சிறுநீர் கழிப்பதாக fetish ஆக மாறும் அந்தக்காட்சிக்கு இணையா இன்றுவரை தமிழில் வரவில்லை!
              அதுவரை வந்த தமிழ்படங்களில் மனநலம் பாதிக்கப்பதேன்றால் மெண்டல் அல்லது நெற்றிபொட்டிற்கு அருகே விரலை வைத்து சுத்தும் சைகை அதிகபட்சம் அம்னீசியா என்பார்கள்!இதில் வித்தியாசமான நோய் .
He is a schizophrenic with paranoid illusions.இதன்பின்னர் வந்த கஜினி போன்ற படங்களில் பல்வேறு புது நோய்களை மேற்கோள் காட்டியிருப்பார்கள்!
மேலும் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகளை பார்த்துத்தான் டரண்டினோ Kill bill படத்தில் அதுமாதிரி வைத்தாரா?என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை!ஆனால் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகள் ரணகளம்!

           இப்ப மனநல காப்பகத்தில் நந்துவும் சுல்தான்(ரியாஸ் கான்) சம்மந்தப்பட்ட காட்சிகள் பற்றி சொல்லும்போது கண்டிப்பா Twelve Monkeys(1995) படத்தை குறிப்பிட்டாக வேண்டும்.மனநல காப்பகத்தில் இருக்கும் பிராட் பிட்.டைம் டிராவலில் தவறாக அங்கு சிக்கிக்கொள்ளும் ப்ரூஸ் வில்லிஸ்.ப்ரூஸ் அதிகமாக பேசாமல் அமைதியாக இருப்பார்.பிராட் பிட்டோ அவரிடம் தொணதொணவென்று பேசிக்கொண்டும் குதித்துக்கொண்டும் சேட்டைகள் செய்துகொண்டும் இருப்பார்!அதை அப்படியே இங்கே பயன்படுத்தியிருப்பார்.சுல்தான் பிராட் பிட் போல சேஷ்டைகள் செய்வதும் நந்து அதிகம் பேசாது அமைதியாக இருப்பதும்!

     
மேலும் நந்து கேரக்டர் என்பது Bane ன் சாயலும் கொண்டது!
இன்னொரு பிரச்சனை இரட்டை வேடம்!முதலில் என்எஸ்ஜி வீரனாக விஜய் கேரக்டரில் நடித்த கமல் பிறகு தினம் நாற்பது முட்டையின்  வெள்ளைக்கருவெல்லாம் தின்று பயங்கரமாக உடலை ஏற்றி நடித்திருப்பார்.ஆனால் துவக்கத்தில் வரும் காஷ்மீர் மிஷன் காட்சியில் பேருக்குத்தான் விஜய்!உடலளவில் நந்து!தடியான ஒட்டுமீசை மொட்டைத்தலையை மறைக்கும் குளிர்கால தொப்பி என்று ஒருமாதிரி சமாளித்திருப்பார்கள்(இதேமாதிரி உத்தமவில்லனில் மீசையில்லாதும் பாபநாசத்தில் விஜய் போலவே தடியான "ஒட்டாத" ஒட்டுமீசை வைத்தும் நடித்திருப்பார்).அதேபோல இரு கமல்களும் மோதும் அந்த மொட்டைமாடி காட்சியிலும் உடையளவில்  விஜய் -உடலளவில் நந்து என்றுதான் இருக்கும்(அங்கே மொட்டைத்தலையை மறைக்க புல்லட் ப்ரூப் ஹெல்மட்!).இவை படத்தில் கொஞ்சம் தனித்து தெரிந்தன.தொழில்நுட்ப குறைபாட்டால் வேறு வழியில்லாமல் அப்படிஎடுத்திருப்பதாகநினைக்கிறேன்.
ஒட்டுமீசை!மொட்டையை மறைக்க தொப்பி!

             அப்புறம் சிறுவயதில் இருந்தே நந்து மனநல காப்பகத்தில்தான் வளர்ந்தவன்.தொடர்ச்சியாக schizophrenia வுக்கு மருந்துகள் சாப்பிட்டுவன்தவர் திடீரென்று காப்பகத்தில் இருந்து தப்பித்ததும் வெறும் போதை ஊசியை போட்டுக்கொண்டு(அது எங்க விக்குது என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்காம்!)  மாத்திரைகள் உண்டாக்கும் மிகக்கடுமையான  withdrawal effect ஐ கடந்து சென்றார் என்பது பக்கா ரசினி ஸ்டைல் :D

            கடுமையான schizoprenia இருந்தும் பட இறுதியில் "அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிடு"ன்னு விஜயிடம்  சொல்லும் காட்சி அபத்தத்தின் உச்சம்!இப்படியா நந்து கேரக்டரை பில்டப் செய்து ஒரேடியா போட்டு உடைப்பார்கள்?இது டிபிகல் தமிழ் சினிமா பாணி!அதாவது பட துவக்கத்தில் ஒரு கேரக்டருக்கு செமத்திய பில்டப் கொடுப்பதும் இறுதியில் திருந்தி வருந்துவதாகவோ(தனி ஒருவன் அரவிந்த்சாமி!) மன்னிப்பு கேட்பதாகவோ காட்டி அந்த கேரக்டரை மொத்தமா சாகடிப்பது! அதிலும் அந்த கேஸ் சிலிண்டர்களை நந்து பிளக்கும் காட்சி இன்னொரு அபத்தம்!


 
           மனநல காப்பகத்தில் இருபத்தஞ்சு வருஷம் இருந்தவர் தொடர்ந்து மனநல மருந்துகளை(கண்டிப்பா அதில் muscle relaxant இருக்கும்) உட்கொண்டவர் இப்படி அதீத பலசாலியாக மாறுவது எப்படி என்பது யாருக்குமே புரியவில்லை(நந்து ஒரு battalion க்கு சமம் என்று ஒரு வசனம் வேறு வருகிறது).அவ்வளவு psyche மருந்துகளை சாப்பிட்டவன் ஒரு கிளாசைக்கூட  இறுகப்பிடிக்க கூட முடியாது என்பதுதான் நிஜம்!இங்கும் ரசினி ஸ்டைல் போல!
                       மேலும் மனநல பிறழ்வு கதாபாத்திரங்கள் அவ்வப்போது hallucinate ஆகும்!அதை ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு ஸ்டைலில் காட்டியிருப்பார்கள்!உதாரணமாக The Dark Knight படத்தில் ஜோக்கர் ஹாலுசிநேட் ஆகும் அந்த கார் காட்சி ரொம்ப subtle ஆ இருக்கும்.
Joker's hallucination
இப்படத்தில் நந்துவின் hallucination கொஞ்சம் flashy ஆக இருக்கும்!
நந்துவின் hallucination

          வணிக சினிமா என்ற ஒற்றை வார்த்தையில் மேற்கண்ட குறைகளை மொத்தமா மூடி மறைத்துவிடலாம்தான்!ஆனாலும் நந்து என்ற அற்புதமான கேரக்டரை மிக மோசமாக பயன்படுத்திக்கொண்டதை விமர்சிக்காமல் இருக்கமுடியாது.
          Shankar-Ehsaan-Loy ன் இசை என்றாலே bass heavy யாத்தான் இருக்கும்(டான்-2,Zingadi na milegi dobara,விஸ்வரூபம்..! etc..etc..) இப்பட பாடல்கள் இன்றும் அபிமானதாக உள்ளன.பின்னணி இசை மறைந்த இசையமைப்பாளர் மகேஷ்.பாடலின் bass hevy தன்மை பின்னணி இசையில் இல்லாமல் போனது!

          திசைமாறாமல் முழுக்கமுழுக்க  நந்துவின் உளவியல் ரீதியான  பயணத்தை மட்டும் தொடர்ந்திருந்தால் படம் அற்புதமாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்!இருந்தாலும் இன்றும் படத்தை என்னால் ரசிக்க முடிவதற்கு காரணம் நந்து!
    

No comments:

Post a Comment