Thursday 22 November 2018

பரியேறும் பெருமாள்

                        இந்தப்படத்தை தாமதமாக பார்க்க காரணம் ஒலக விமர்சகர்கள்!அவர்கள் எந்த ஒரு படத்தையும்  ஆகா!ஓகோ என்றாலே கொஞ்சம் உசாராகி 'சரி படத்த அப்புறம் பாத்துக்கலாம்!' என்று ஒத்திப்போடுவதே வழக்கம்!
        படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை காண முடிகிறது.இந்தப்படம் வெற்றி பெறவும் ரஞ்சித் இயக்கிய கடந்த இரண்டு படங்கள் ரசினி நடித்திருந்தபோதும் பெரிய வெற்றியை பெறாததன் காரணத்தையும்  பிறகு பார்க்கலாம்.

      சாதிய ஒடுக்குமுறை சாதி ஆணவ படுகொலைகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே இருந்தது(இருக்கிறது என்றே நினைக்கிறன்).ஆனா சமீப காலமா இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன.பல்வேறு சாதிய இயக்கங்கள் கட்சிகள் தமிழன் என்ற முகமூடி அணிந்து பின்னே செய்யும் தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க இப்போதுள்ள இளைய தலைமுறையில் பலரும் பெயருக்கு பின்னாடி சாதி பேரை போடுவதை ஒரு பேஷனாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் சென்ற தலைமுறையை விட சாதிய பிரக்ஞை கூடுதலாக உள்ளவர்களாக இருப்பதகாவே தோன்றுகிறது.
          சமூக வலைதள ஊடகங்களில் காணப்படும் சாதிவெறி பதிவுகள்- எதிர்வினைகள்; தன் சாதியை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக சில நடிகர்களை தலைமேல் தூக்கிவைத்து ஆடுதல்,சினிமாக்காரனை கூத்தாடி என்று விமர்சிக்கும் இவர்களே 'தன் சாதி நடிகன்' படத்தை DP யாக வைத்துக்கொள்ளும் நகைமுரணையும் காண முடிகிறது.
       ஆணவ படுகொலைக்கான ஆணிவேர் உடலில் இருக்கிறது.உயர்ந்த சாதி ஆண்ட பரம்பரை என்றெல்லாம் உசுப்பிவிடப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு மகள்களை(கவனிக்க மகள்கள் தான் பிரதானம்) ஒரு சுய சிந்தனை கொண்ட பெண்ணாக பார்க்காமல் தன் குடும்ப-சாதி பெருமையை காப்பாற்றப்போகும் தன் சாதிக்கு வாரிசுகளை தரப்போகும் ஒரு புனித உருவாகவே பார்க்கப்படுகிறாள்.இது மதங்களின் மீது தீவிர பற்று கொண்டோருக்கும் பொருந்தும்.
           அத்தகைய புனித உருவை தன் சாதி ஆண்மகன் கையில் பிடித்துக்கொடுப்பதன் மூலம்   கலப்படமே இல்லாத 100% தன்- சாதியை சார்ந்த - pure bred வாரிசுகளை பெற்றெடுக்க வைப்பதே அவர்கள் லட்சியம்!அப்படியல்லாமல் வேறு சாதி அதிலும் தன் சாதியை விட தாழ்ந்த சாதியை சார்ந்த ஒருவனை இவள் காதலித்தாள்/திருமணம் செய்துகொண்டாள் என்றால் அவள் களங்கப்பட்டுவிட்டாள்!இனி அவள் தனது வாரிசே இல்லை!என்று கைகழுவுவதோடு நிற்காமல் அவர்கள் இருவரையும் போட்டு தள்ளவும் ஏற்பாடு செய்ய தயங்குவதில்லை.
        சில நேரங்களில் கூலிப்படை மூலம் அல்லாது பெற்ற தந்தையே கலப்பு மணம் புரிந்த மகளின் கழுத்தை வெட்டிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு தனியாகவோ மனைவியுடனோ சரணடையும் செய்திகளை பார்த்திருப்போம்!
       இப்படத்தில் அதைவிட நுட்பமாக அந்த கிழவன் பேருந்தில் புட்போர்டு அடிப்பது போல நின்றுகொண்டு தன் சாதி பெண்ணை காதலித்த அந்த  தலித்  இளைஞனை நாசூக்காக கை நழுவ வைத்து கொலை செய்தல்,ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்து விபத்தில் இறந்ததாக நிறுவுதல் என்று செல்லும் காட்சிகளை குறிப்பிடலாம்!அடுத்தநாள் செய்தியில் வாலிபர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து சாவு!நீரில் மூழ்கி சாவு என்று முடிந்து விடுவதாக வசனமே இல்லாமல் மிக வலிமையாக அதை பதிவு செய்துள்ளார் இயக்குனர்!
                அப்புறம் ஜோ மற்றும் ஆனந்த் கதாபாத்திரங்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் .ஆனால்  பரியனோடு நட்பாக இருப்பதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.ஜோவை லூசுப்பொண்ணு கேரக்டர் என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.அவளுக்கு சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய பிரக்ஞையே இல்லை என்று சொல்லலாம்!ஒருவேளை ஜோவும் தீவிர போராளி போல கட்டி எல்லோரும் கடுமையாக தத்துவ விசாரணை செய்வதாக காட்சிகள் வைத்திருந்தால் இப்படம் கலைப்படமாகி பத்து பேரு பாத்து பாராட்டியதோடு முடிந்திருக்கும்!

       ஆக அந்த சமரசம் என்பதை பெரிய குறையாக பார்க்க தேவையில்லை.ஆனால் ஆனந்த் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அறிந்தவனாக இருக்கிறான்.அதே நேரத்தில் பரியனோடு சாதி வித்தியாசம் பார்க்காமல் பழகுகிறான்.இடைநிலை சாதியினர் எல்லோருமே  சாதி வெறியர்கள் என்று காட்டாமல் இப்படிப்பட்டவர்களும் உள்ளார்கள் என்பதை இயக்குனர் காட்டியது கூடுதல் பலம்.வெறுமனே கருப்பு-வெள்ளை க்குள் சிக்கிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.


         அதேநேரம் ஜோவின் தந்தை.மகளின் திருமணத்திற்கு வந்த பரியனை தனியறைக்கு கூட்டிக்கொண்டு போய் அவனை தன் சாதிக்கார வெறியன்கள் அடித்து நொறுக்கியதும்  "உன்ன கொல்றதோட இல்லாம என்னோட புள்ளையையும் கொன்னுடுவாங்கடா!உன்னை கையெடுத்து கும்பிடுறேன்டா!" என்று கெஞ்சும் போது- தான் இதை இயல்பாக எடுத்துக்கொண்டாலும் தன்னை மீறிய தனது சாதிக்காரன் விடமாட்டான் என்று சொல்ல வருவதாக விளங்குது.ஆனா படத்தின் கடைசி காட்சியில்  ஜோவின் தந்தை தான் செய்த தவறுகளுக்கு வருந்துவதால் மட்டுமே  இந்த கொடுமை  முடிவுக்கு வந்துவிடாது என்பதையும் நாம் உணரலாம்!
           அதே போல பரியனின் தந்தையை அம்மணமாக்கி உண்மையில் அவர் ஆணா?என்று பார்க்கும் அந்த தருணத்தில் சாதிவெறி மட்டுமல்லாது இன்னொரு பொதுபுத்தியையும் காண முடிகிறது. நாம் காணும் மனிதர்களை வெளிப்புற தோற்றம் சார்ந்து எடை போடுதல்.அதாவது ஆண் என்பவன் தோற்றத்தில் 100% ஆணாக இருக்க வேண்டும்.கொஞ்சம் பெண் தன்மை உள்ளவனாக இருந்தால் அவன் எதிர்கொள்ளும் கேலி கிண்டல்களுக்கு அளவே இல்லை.அதிலும் ஆண் என்பவன் கட்டையான ஆண் குரலோடு இருக்க வேண்டும்.
    பெண் குரல் கொண்ட ஆணும், ஆண் குரல் கொண்ட பெண்ணும் இருந்தாலும் இதில் கேலிக்குள்ளாவது பெண் குரல் கொண்ட ஆண்தான்!இதன் பின்னால் உள்ள உளவியல் தனிக்கதை. அப்படி அதற்கு முன்பே பலமுறை பரியனின் தந்தை அப்படி அம்மணமாக்கி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி சொல்வதாகவும் வருகிறது.பரியனே தனது தந்தை பற்றி சொல்ல கூச்சப்பட்டு 'அப்பா வண்டி மாடு வச்சிருக்காரு' என்று மழுப்புகிறான்.
             
       உறியடி படம் போல சாதி இயக்கத்தின் தலைவனை போட்டு தள்ளுனா எல்லாம் சரியாகிடும் என்பது மாறியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.ஆணவப்படுகொலை செய்வோர் ஒன்றும் ஸ்லீப்பர் செல் இல்லை.மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் இயங்குவதும் வராட்டி அமைதியாக இருப்பதற்கும்!இவர்களுக்கு மேலிடமும் வேண்டாம் இயக்கங்களும் வேண்டாம்!தனி மனிதனாகவே இத்தகைய கொலைகளை "சாதிப்பெருமையை தூய்மையை" நிலைநாட்டும் பொருட்டு செய்துவிட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்காதவர்கள்!அம்முயற்சி தோல்வியடைந்தால் தன் சாதிக்கே தான் இழுக்காக போய்விட்டதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.இப்படத்தில் அந்த கிழவன் பயமில்லாது ரயிலுக்கு முன்னே போய் உக்காரும் அந்த காட்சியை சொல்லலாம்!

                கறுப்பி எனும் நாய் அது நீலமாக மாறுதல் இவையெல்லாம் மாரி செல்வராஜே வைத்தாரா இல்லை ரஞ்சித்தின் யோசனையா என்ற கேள்வி எழாமல் இல்லை.இருந்தாலும் அது கதையோட்டத்திற்கு வெளியே நிற்காமல் கதை நகர்வுக்கு பயன்பட்டுள்ளது.
         கதிர் இதற்கு முன்னாடி நடிச்ச படங்களில் "இந்த காட்சில எப்படி ரியாக்ட் பண்ணலாம்?" என்று முடிவெடுக்க முடியாத நிலையில் முழிப்பதாகவே அவரது முகபாவம் இருந்துவந்துள்ளது.இந்த படத்தில் அது இல்லை.

            ஒரு தீர்வை இறுதியில் முன்வைத்ததால் இதனை வணிக சினிமா என்றே கூறலாம்!படங்களில் கூறப்படும் நேர்மறை கருத்துக்கள் சிந்தனைகள் சமூகத்தில் எந்தவித நல்ல விளைவையும் ஏற்படுத்திவிடும் என்று நான் என்றுமே நம்பியதில்லை.இருந்தாலும் தீவிர கொள்கை, கோட்பாடு, விவாதங்கள், குறியீடுகளை வைக்கிறேன் என்று பிரதான கதையிலிருந்து பார்வையாளனின் கவனத்தை திசை திருப்பி படத்தையே டம்மியாக்கி விடுதல் வெகுசன மக்களுக்கு புரியாமல் ஏதோ ஒரு அறிவாளி elite  கள் மட்டுமே சிலாகிக்கும் படமாக அல்லாது வலிமையாக அதேநேரத்தில் விறுவிறுப்பாக்கவும் ஒரு படத்தை கொடுப்பது எளிதான காரியமல்ல!
          ரஞ்சித் தோற்ற இடம் இதுதான்!அவரின் அட்டகத்தி இன்ன்றைக்கும் எனதபிமான படம்.அதில் வடசென்னை தலித் மக்களின் வாழ்க்கையை கதையோடு பதிவு செய்திருப்பார்.அதற்கு பிறகான படங்களில் குறியீடுகளை முன்னிறுத்தி கதை ஓட்டத்தை நீர்க்க செய்துவிட்டார்!இப்படம் அடைந்திருக்கும் அந்த balance ஐ அவரும் அடைய முயலட்டும்!
         இப்போது மாரி செல்வராஜின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இரண்டாவது படமாகவே இருக்கும்!இதே போன்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் திருப்திப்படுத்தும் (ஒரு சரியான சமநிலையில்) இன்னொரு படத்தை அவர் கொடுத்தாலேயொழிய அவர் onetime wonder என்பதாக ஓரங்கட்டப்பட்டுவிடும் அபாயமும் உள்ளது.
        

No comments:

Post a Comment