Monday 25 May 2020

The Tell-Tale Brain - V. S. Ramachandran


             வி.எஸ்.ராமச்சந்திரன்  பத்தொன்பதாம்  நூற்றாண்டை நினைவு கூர்கிறார்.அப்போது ஒருவர் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த பெரிதாக  எந்தவித ஆய்வக  வசதிகளும் தேவைப்படவில்லை!மைக்கேல் ஃபேரடே ஒரு காந்தம் மற்றும் காப்பர் காயில் கொண்டு டைனமோ/மின் மோட்டார் கண்டுபிடிக்க காரணமாக இருந்தார்.ஆனால் தற்காலத்தில் எந்த துறையிலும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள், விலையுயர்ந்த கருவிகள் தேவை என்ற நிலையே உள்ளது.அப்படியாக இல்லாமல் 19 ஆம் நூற்றாண்டின் அடிப்படை அணுகுமுறை கொண்டு தற்கால மருத்துவ சவால்களை எதிர்கொள்ள முடியுமா?என்று இவர்  சோதித்ததன் விளைவுகளை, வெற்றிகளை இதில் பதிவு செய்துள்ளார்!
.
இப்புத்தகத்தின் அத்தனை தலைப்புகளையும் பற்றி இங்கே விவரித்தால் வாசிப்பவருக்கு ஒவ்வாமை உண்டாகலாம்!அதனால் சில  தலைப்புகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
.


Phantom Limbs.
          உதாரணமாக ஒருவரின் வலது கை விபத்தில் சேதமாகி முற்றிலும் எடுக்கும்படி ஆகிறது.அதான் கையை எடுத்தாச்சே!அடுத்த வேலையை பார்ப்போம் என்று அந்த நபர் நினைத்தாலும் அவரின் மூளை நினைப்பதில்லை.கையில் ஏற்படும் உணர்வுகள் மூளைக்கு சென்று பதிவாகி அதற்கு தகுந்தாற்போல் மூளை ஒரு குறிப்பிட்ட உணர்வை உணரவோ அல்லது அந்த உணர்வின்படி அந்த கைக்கு சமிக்ஞ்சை அனுப்பவோ செய்யும்.
           இப்போதோ கை துண்டிக்கப்பட்டுவிட்டது.மூலையில் வலது கைக்கான இடங்கள் என்பது அப்படியே உள்ளன.ஆனால் அதிலிருந்து வரும் உத்தரவுகளை ஏற்க கை இல்லை.இந்நிலையில் மூளை அந்த கைக்கான உணர்வுகளை உடலின் வேறொரு பகுதிக்கு மாற்றி பதிவு செய்கிறது.
வி.எஸ்.ராமச்சந்திரன்
             உதாரணமாக கை துண்டிக்கப்பட்ட ஒரு நோயாளி இவரிடம்  துண்டிக்கப்பட்ட கை பயங்கரமாக அரிக்கிறது என்கிறார்.வி.எஸ்.ஆர். அவரது முகத்தின் ஒரு பகுதியில் இந்த கைக்கான கட்டளைகளை பெறும் இடங்களாக  மாற்றப்பட்டுள்ளதை அறிகிறார்.முகத்தில் ஒரு பகுதியில் உள்ள ஒவ்வொரு சிறு புள்ளியிலும் ஒவ்வொரு விரல்கள் உள்ளங்கை போன்றவை உள்ளதை அறிகிறார்.பிறகு முகத்தின்  அந்த பகுதியை சொரிவதன் மூலம் வெட்டப்பட்ட கையின் ஒரு விரலில் உள்ள அரிப்பு உணர்வு தீர்ந்து போகிறது.
                 ஒரு கை விளங்காமல் போய் பிறகு துண்டிக்கப்படும் வேறொரு சந்தர்ப்பத்தில் வேறுமாதிரியான நிகழ்வை காண்கிறார் வி.எஸ்.ஆர்.அங்கே அந்த கை செயலிழந்து போய் பல நாள் கழித்தே  துண்டிக்கப்பட்டுள்ளது.அதனால் துண்டிக்கப்பட்ட பிறகும் அந்த கை செயலழிந்த நிலையிலேயே இருப்பதாக மூளை சொல்கிறது.அப்போது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் நன்றாக இருக்கும் வலது கையை காட்டி அதன் நேர் பின்புறம் துண்டிக்கப்பட்ட(அதாவது இல்லாத) இடது கையை சரியான நிலையில் வைத்துக்கொண்டு வலது கையை அசைப்பதன் மூலம் இல்லாத இடது கையின் இறுக்கங்கள்&வலிகள் காணாமல் போவதை கண்டுபிடிக்கிறார்.
துண்டிக்கப்பட்ட இடது கையை கண்ணாடியின் பின்பக்கம் வலது கையின் பிம்பத்தோடு ஒன்றிப்போகும் வண்ணம் வைத்திருத்தல்

               ப்ராக்ச்சர் ஆன கை.கை அசைத்தால் வலிக்கும் என்பது நிரந்தரமாக பதிவாகி கை குணமான பின்பும் கையை அசைத்தால் வலி!A-B நிரந்தரமாக பதிவாகிறது.பிறகு மேற்சொன்ன கண்ணாடி டெக்னிக் மூலம் வலது கையை அசைப்பதன் மூலம் உடைந்து சேர்ந்த இடது கை அசைவதாக மூளை உணர்ந்து வலி இல்லையா?சரி அப்போ அசைச்சிக்க! என்று கட்டளையிட பிறகு இடது கையில் வலி இல்லை!

மிரர் ந்யூரான்- மற்றவரின் வலி உணர்தல்  

.
                ஸ்லாப்ஸ்டிக்.

ஒருவர் வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்து மண்டை உடைந்தால் நாம் சிரிப்பதில்லை.அதே அவர் விழுந்து எந்த சேதாரமும்  இல்லை என்பதை மூளை உணரும்போதே சிரிக்கிறோம்.இத்தகைய நமது மனப்போக்குதான் ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்கு........உதாரணமாக செந்தில் கவுண்டரிடம் அடிவாங்குதல்,வடிவேலு சேரிலிருந்து சேற்றில் விழுதல்,குண்டு வெடித்தாலும் கருப்பாக நிற்கும் நடிகர்களை பார்த்து சிரித்தல்......இவை அனைத்தும் மேற்சொன்ன மூளையின் கட்டளைப்படியே நிகழ்கிறது.இதை விளக்கிய வி.எஸ்.ஆர். Black Humor களுக்கு நாம் ஏன் சிரிக்கிறோம் என்பதை விளக்காமல் விட்டுவிட்டார்.
           ஒரு குரங்கு இன்னொரு குரங்கை  எதிரில் காணும்போது அதை அச்சுறுத்த பற்களை காட்டியபடி வரும்.பிறகு அது தன நண்பன் என்பதை உணர்ந்ததும் அந்த பற்களை காட்டிய நிலை என்பது சற்று தளர்ந்து அதுவே நமக்கு பரிச்சயமான நபரை பார்க்கும்போது சிரிக்கிறோம் என்கிறார் வி.எஸ்.ஆர்
.
                     பார்வை  


பார்வை என்ற அளவில் நமது மூளையை பொறுத்தளவில் நாம் இன்றும் கற்கால மனிதர்கள்தான்! எந்த செயற்கை விளக்கு,எண்ணெய் விளக்கு,தீப்பந்தம் போன்றவை இல்லாத காலத்தில் மனிதகுலத்திற்கு வெளிச்சம் தந்தது சூரியன் மற்றும் சந்திரனே!அவை இரண்டும் நமது தலைக்கு மேலே உள்ளன.அதனால் மூளையை பொறுத்தளவில் இன்றும் அதற்கு வெளிச்சம் என்றால் நமது தலைக்கு மேலிருந்து வரும் வெளிச்சம் என்பதாகவே அது உணரும்!நீங்கள் உங்கள் தலையை தொண்ணூறு டிகிரி வலது/இடது பக்கம் சாய்த்து பார்க்கும்போதும்மூளைக்கு வெளிச்சம் என்பது தலைக்கு மேலிருந்து வருவதுதான்!அதாவது நீங்கள் தலையை வலதுபுறம் தொண்ணூறு டிகிரி சாய்த்து பார்க்கும்போது வெளிச்சம் என்பது வலது புறத்தில் இருந்து வருவதாகவே மூளை கருதும்.

உதாரணமாக கீழுள்ள படத்தை பார்க்கவும்.முதல் வரிசையை நீங்கள் இட்லி தட்டு போல குழியாக கண்டால் கீழ் வரிசை புடைப்பாக தெரியும்& vice versa.இதற்கு காரணம் மூளையை பொறுத்தளவில் ஒளி என்பது நம் தலைக்கு  மேலிருந்து வரும் ஒன்று!



 அதே காரணத்தால் கீழுள்ள படத்தில் பாதி இட்லி தட்டுகளாகவும் மீதி புடைப்புகளாகவும் கலந்து தெரியும்.
.

 மேலும் நமது மூளையானது அதுவாகவே கோடிட்ட இடங்களை நிரப்பும் தன்மை வாய்ந்தது.உதாரணமாக கீழே உள்ள இருபடங்களை காணும்போது இரண்டிலுமே பெரிய வட்டம், இரு புள்ளிகள், இரண்டு கோடுகள் கொண்டதாக இருந்தாலும் முதல் படத்தை நமது மூளை ஒரு முகமாகவே பதிவு செய்கிறது.இரண்டாம் படத்தில் அப்படி ஒரு ஒழுங்குமுறைசட்டகத்துள் கொண்டுவர இயலாததால் தனித்தனி புள்ளிகளும் கோடுகளுமாக தெரிகிறது.



இதுபோலஒரு அடர்ந்த பச்சைப்புதர் ஓவியம்/புகைப்படத்தில் மெலிதான மஞ்சள் கீற்று தெரிந்தால் இயல்பாகவே நமது மூளை அதை ஒரு புலி/சிங்கமாக பதிவு செய்யும்!

No comments:

Post a Comment