Sunday 27 April 2014

Ikiru(1952)-வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருத்தலுக்குமான வேறுபாடு



           பொதுவாகவே நம்மில் பலருக்கு வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்குமான (Surviving &Living)வேறுபாடு தெரிவதில்லை.அதை நாம்  தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. பலரை பொறுத்தளவில் எந்திரத்தனமாக ஓபீஸ் வேலை, பின்னர் வீடு, பின்னர் மீண்டும் ஓபீஸ் இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்தல் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது வாழ்தலில்லை.இது உயிர் பிழைத்திருத்தல்/ஜீவித்தல்.
        பொதுவாகவே ஒரு சொல்லாடல் உண்டு “நா பொழப்ப தேடி பட்டணம் போறேன் என்பார்களே ஒழிய “நான் வாழ்வதற்காக பட்டணம் போறேன் என்று யாரும் சொல்வத்ல்லை.காரணம் பட்டணம் என்பதே பணம் சம்பாதிப்பதை தவிர்த்த பிற  “தேவையற்றவைகள்  வெட்டி எறியப்பட்ட  ஒரு இடம்.அதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுதல்,நல்ல காற்று,நல்ல தண்ணீர்,நிதானமான வாழ்க்கை,கூட்டு குடும்பம்  என்பதெல்லாம் அங்கு கெட்ட வார்த்தைகள்.
           இந்தப்படத்தை பொறுத்தளவில் இரண்டு விஷயங்களை இது நெற்றிபோட்டில் அடித்தாற்போல உரக்க உணர்த்துகிறது.
ஒன்று: நகரின் எந்திர ஜீவனம்
இரண்டு: அரசு அலுவலங்கள், அதில் இருக்கும் அரசு ஊழியர்களின் அதிகாரத்திமிர்,பணியில் அலட்சியம்,அங்கு வரும் மக்கள் மீது எரிந்து விழுதல் போன்ற அடாவடி செயல்பாடுகள்.
              கதையின் நாயகன் வாண்டனபி  அரசு அலுவலகம் ஒன்றில் முப்பது வருடமாக வேலை பார்ப்பவர்.படிப்படியாக முன்னேறி இப்போது துறைத்தலைமை(செக்ஷன் சீஃப்) பொறுப்பை அடைந்திருப்பவர்.அங்கிருக்கும் அனைவருமே மனிதத்தன்மையற்ற எந்திரங்களாகவே சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள்(அரசு அலுவலகங்கள் என்றாலே அப்படித்தானே?).குறைகளை மனுவாக எடுத்துகொண்டு வரும் மக்களை அலைகழிப்பவர்கள்.அதாவது “இது இந்த செக்ஷன் இல்லை. அந்த செக்ஷன் போ என்பார்கள்.அங்கே போனால் இதே வசனத்தை வேறுமாதிரி சொல்வார்கள். இப்படியாக சுத்தலில் விட்டு மக்கள் தாங்கள் கொண்டுவந்த பிரச்சனையே மேல் என்று ஓடிவிடுவார்கள்.இதுதான் அவர்கள் வேண்டுவது.அதாவது தங்களின் எந்திரத்தன்மையை குலைக்கும் எதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.இங்கு மனித நேயம், மனிதத்தன்மை எல்லாம் நகைப்புக்குரிய வார்த்தைகள்.கதையின் நாயகன் வயிற்று வலி என்று மருத்துவமனை செல்கிறார்.   


     மருத்துவர்  'ஒன்றுமில்லை வெறும் வயிற்றுவலிதான்' என்று சொன்னாலும் தனக்கு கேசர் தான் என்பதை அவர் உணர்கிறார்.அப்போதுதான் அவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்கிய தருணம் என்று சொல்லலாம்.மரணம் நெருக்கும் வேளையில்தானே பல பேருக்கு வாழ்க்கையை பற்றிய நினைப்பு வருது...
         
           அவரது மகனும் மருமகளும் அவரின் பென்ஷன் பணம் பிற பெனிபிட்டுகள் ஆகியவற்றை கொண்டு ஒரு நவீன வீடு கட்டிவிட வேண்டும் என்று விவாதிக்கிறார்கள் .மேலும் “தந்தை அனைத்து பணத்தையும் சுடுகாட்டுக்கு தன்னோடு கொண்டு போக போகிறாரா? என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .நமது அறையில் அவருக்கென்ன வேலை? என்று சலித்து கொள்கிறார் மனைவி.
                   
       தனது மனைவி போட்டோவையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்.அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளை சார்ந்த பல்வேறு பழைய நினைவுகள் அவர் கண்முன்வருகிறது.
25 ஆண்டுகால சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

        வாண்டனபி தனக்கு புற்றுநோய் இருப்பதை தனது மகனிடம் சொல்ல முயல்கிறார்.ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் போகவே மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ஐந்து லட்சம் yen களை வங்கியில் இருந்து எடுத்துகொண்டு போகிறார்.
மகனின் மாமா “மனைவி இறந்த பின் உனக்ககாக இருபது வருடங்கள் தனியாக இருந்தவர் இப்போது பெண்ணாசையால் ஓடியிருக்கலாம் என்கிறார்.  
           பாரில் ஒரு எழுத்தாளனை சந்திக்கிறார் “பல மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் மட்டுமே வாழ்வை பற்றி உணர்கிறோம்.வாழ்வை அனுபவிப்பது என்பது மனிதனின் கடமை.இவ்வளவு நாள் நீ வாழ்வுக்கு அடிமையாகி இருந்தாய் இப்போது நீ  அதற்கு ஆசானாக மாறு என்கிறார் எழுத்தாளர்.தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.
                       வாண்டனபி பல நாட்கள் அலுவலகம் செல்லாமல் போகவே கோப்புகள் நூற்றுக்கணக்கில் தேங்கி விடுகிறது.அந்த அலுவலகத்தில் உயிர்ப்போடு வாழ நினைக்கும் ஒரே ஜீவனான டோயோ என்ற பெண்மணிக்கு இந்த எந்திர அலுவகலத்தை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார்.ஆனால் 'மேலதிகாரி வாண்டனபி கையெழுத்தில்லாமல்  அது நடக்காது' என்று சக ஊழியர்கள் சொல்லவே அவர் வாண்டனபியை தேடுகிறார்.ஒருநாள் வழியில் அவரை எதேர்ச்சையாக சந்தித்து ‘நான் அலுவலக வேலையை ராஜினாமா செய்ய உங்கள் கையெழுத்து தேவை, உதவுங்கள் என்று கேட்க அவர் தன வீட்டுக்கு அழைத்து சென்று கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.ஆனால் இதை பார்க்கும் அவரது மகன்,மருமகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் ‘இந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கத்தான் இவர் இவ்வளவு பணத்தோடு வெளியேறி விட்டார் என்று அவர் போனபின் விவாதிக்கிறார்கள்.
           டோயோவை அழைத்துக்கொண்டு பல இடங்கள் செல்கிறார் வாண்டனபி.தான் சாப்பிட ஆர்டர் செய்த உணவுகளை கூட டோயோவை சாப்பிட சொல்கிறார்.அவளும் ஆர்வமாக அதை வாங்கி சாப்பிடுகிறார்.
இங்கு டோயோவாக நடித்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டும்.அவரின் கதாபாத்திரம் எப்படி என்றால் அவரை பார்த்தவுடனேயே ஒருவித உற்சாகம் நம்மையும் தொற்றிகொண்டுவிடும்.அத்தகைய ஒரு உற்சாகமான லைவ்லியான கேரக்டர்.நன்றாகவே நடித்துள்ளார்.
 
டோயோ
              அந்தப்பெண்ணிடம் “நீ எப்படி இவ்வளவு உயிர்ப்போடு வாழ்கிறாய்?சாவதற்கு முன் உன்னைப்போல ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும்.உன்னைப்போல் எப்படி இருப்பதென்று சொல் என்கிறார்."நான் தினம் ஜப்பான் குழந்தைகள் விளையாட பொம்மைகள் தயாரிக்கிறேன்(அந்த கம்பெனியில் இவள் வேலை செய்கிறாள்).ஜப்பான் குழந்தைகளோடு விளையாடுவது போலவே எனது வேலையை உணர்கிறேன்" என்கிறாள்.இதை கேட்டவுடன் 'என்னால் சில விஷயங்கள் செய்ய முடியும்' என்று உடனடியாக அலுவலகம் சென்று "அந்த கொசுக்கள் மொய்க்கும் குட்டையை நான் பார்வையிட வேண்டும்" என்று செல்கிறார்.இவர் மேலதிகாரி என்பதால் இவருக்கு கீழே இருப்பவர்கள் வேறு வழியின்று இவரோடு செல்கிறார்கள். 
                இங்கே தமிழ் சினிமா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு கேன்சர் என்று சொல்லிட்டா போதும் உடனே "வாழ்வே மாயம்,காற்றடைத்த பை, நாலு பேரு தூக்குவான்" என்று ஏதாவது உபயோகமில்லாமல் உளறி கொண்டிருப்பார்கள்.ஆனால் இங்கே வாண்டனபி இதுமாதிரி அக்கப்போர் எதுவும் செய்யாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
            இவர் அனுமதி மட்டுமன்றி இவருக்கு மேலுள்ள வேறு பல அதிகாரிகள் தயவிருந்தால்தான் இது நடக்கும் என்பதால் ஒவ்வொரு அதிகாரியின் அறை வாசலிலும் தவமாய் இருக்கிறார்.அவர்கள் இவரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் இவர் அவைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து கெஞ்சுகிறார்."ஏன் இப்படி உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்கிறீர்கள்?" என்று சக அலுவலர் கேட்க "இருப்பது கொஞ்ச நேரம் இதற்கெல்லாம் வருந்த நேரமில்லை" என்கிறார்.ஒருவழியாக பூங்கா அமைக்க அனுமதி கிடைத்து பூங்கா அமைக்கப்படுகிறது.கடைசியாக அந்தப்பூங்காவில் அவர் ஊஞ்சலில் அமர்ந்து கொட்டும் பனியிலும் தனது அபிமான பாடலை பாடியபடியே உயிரை விடுகிறார்.இந்தக்காட்சி படமாக்கப்பட்ட விதம் கண் கலங்க வைப்பதாக உள்ளது.எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மனதை உருக்கும் வண்ணம் உள்ளது.
மனதை உருக்கும் அந்தக்காட்சி

         அவர் இறந்தபின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.சக அலுவலக "எந்திரங்கள்" கடமைக்கு உட்காந்திருக்க பூங்காவை சுற்றியுள்ள மக்கள் உண்மையான பாசத்தோடும் கண்ணீரோடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.அதை பார்த்து அதிர்கிறார்கள் இந்த எந்திரங்கள்.
அப்போது பூங்கா பற்றிய பேச்சு எழுகிறது.நாட்டில் அமைக்கப்படும் பூங்கா எல்லாம் வாண்டனபி அமைத்ததாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று சக எந்திரங்கள் வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.
"அந்த பூங்கா வாண்டனபியால் நிகழவில்லை.தேர்தல் நெருங்குவதால் நிகழ்ந்துவிட்டது" என்கிறார் ஒரு அலுவலர்.மற்றொருவர் "அவர் இருந்தது பொது விவகார துறை.ஆனால் பூங்காவை அமைத்தது பூங்கா துறை.இவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை" என்று இவ்வாறாக ஆளாளுக்கு தாங்கள் கிரெடிட் எடுத்துகொள்ள முயல்கிறார்கள்.ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் போட்டோவில் சிரிக்கிறார் வாண்டனபி.காரணம்  பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டவர் அவரே.
"சிட்டி கவுன்ஸில் மற்றும் துணை மேயர் தேர்தல் நெருங்கியதால் மட்டுமே இதை செய்தனர்.இல்லாவிடில் வாண்டனபியின் கோரிக்கை எல்லாம் சும்மா" என்கிறார் மற்றொருவர்.திடீரென்று அனைத்து ஊழியர்களும் சபதம் எடுக்கிறார்கள் "வாண்டனபி போல நாமும் மக்களுக்கு ஏதேனும் செய்வோம்" என்று.
           அடுத்த நாள் ஊழியர்கள்(எந்திரங்கள்) அலுவலகத்தில் அமர்ந்திருக்க ஒரு சாமானிய பெண் வந்து உதவி கேட்க "இது இந்த்துறையின் கீழ் வராது.வேற டிபார்ட்மென்ட்" என்று சொல்லி அனுப்புகிறார் ஒரு ஊழியர்.மற்றொரு ஊழியர் திடீரென்று பொங்கி எழுந்து நேற்று செய்த சபதத்தை நினைவு கூற முயன்று தோற்று மீண்டும் தனது கோப்புக்குவியலில் மூழ்குகிறார்.அதாவது மீண்டும் அவர்கள் எந்திரங்களாகி விட்டனர்.சபதம் எல்லாம் சும்மா!
            வாண்டனபியாக நடித்தவர் டகாஷி ஷிமுரா.குரசோவாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர்(மற்றொருவர் டோஷிரோ மிஃபுனே).குரசோவா இயக்கிய முப்பது படங்களில் 21 படங்களில் நடித்த பெருமை கொண்டவர்.இந்தப்படத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்ட, விரைவில் மரணம் என்பதை உணர்ந்த ஒரு வயதான மனிதாரக வாழ்ந்துள்ளார்.அதுவும் அந்த கண்களில் மரண பயத்தை காட்டும் விதம் இத்தனை வருட வாழ்க்கையில் நாம் செய்ததுதான் என்ன?என்ற கேள்விக்கு பதில் தெரியாமையால் கூனிக்குறுகிய உடல் மற்றும்  மனம் ஆகியவற்றை மிக அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
கண்களில் தெரியும் வேதனை
 
             இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள்  உங்கள்  மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பிறரைப்பற்றி கவலைப்படாமல்  சமீபத்தில் செய்தது எப்போது?

2 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

test said...

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Post a Comment