Thursday 20 October 2016

தொட்டி ஜெயா (2005)


                  சிம்பு நடித்த ஒரே உருப்படியான படமாக நான் கருதும் படம்!!


                                'ஆறு  மெழுகுவர்த்திகள்'  படத்துக்கு ஒலக விமர்சகர்கள் எல்லாரும்  சொல்லி வச்சாப்ல "இந்த இயக்குனர் ஏற்கெனவே எடுத்த முகவரி படத்தை  பார்த்தோமானால் ..." என்ற டெம்ப்ளேட் வாசகத்தோடே விமர்சனத்தை துவக்கினார்கள்.ஆனால் அதற்குப்பின் (காதல் சடுகுடு குப்பை என்பதால்  அதை  விட்டுவிடுவோம் ) வந்த  இந்தப்படம் பற்றி பேசாமல் விட்டுவிட்டார்கள்.
சரி எல்லா ஒலக விமர்சகர்களும் ஒரே 'வாத்து' அச்சில் வார்த்தது என்பதால் விட்டுவிடுவோம்!               எப்படி  அரசியல்  சமூக  நிலைப்பாடுகளில்  status quo  என்பது  உள்ளதோ  அதேபோல  சினிமா உலகிலும்,  திரைப்படப்பாடல்கள்  உலகிலும்  உண்டு.எந்த  படம்  எல்லாராலும்  பேசப்படுகிறதோ  அதைப்பற்றியே  விவாதங்கள்  எழும்பும்.பேசப்படாத  பல  நல்ல  படங்கள்  அதனால்  வெளிச்சத்திற்கு  வராமலேயே  போய்விடும்.அதற்காக  தொட்டி  ஜெயா  ஓலகத்தரமான  படம்  என்றெல்லாம்  சொல்லவில்லை.அது  ஒரு  நல்ல  வணிக சினிமா.நல்ல  வணிக  சினிமாக்கள்  அருகிவரும்  இக்காலகட்டத்தில்;  போலியான  பல  படங்கள் மாற்று  சினிமா/ஒலக  சினிமா  என்று  ஏகோபித்த  பாராட்டுக்கு(அதே  status quo தான்) உள்ளாகிவரும்  வேளையில் இப்படம்  பற்றி  பேசவேண்டிய தேவை  உள்ளது.

                       இப்பட  டிரைலர்,  போஸ்டர்  எல்லாவற்றிலும்  இருளே  பிரதானமாக  இருந்தாலேயே  இப்படத்தை  பார்க்க  சென்றேன்.மொத்த  தியேட்டரையும்  ஒற்றை  தூண்  தாங்கிக்கொண்டிருக்க  சற்று  பயத்துடனேயே படத்தை  பார்க்க  வேண்டியதாயிருந்தது!
படம் பிடிக்க மிகமுக்கிய காரணம் சிம்புவின் மொத்த வசனத்தையும் ஒரே பக்கத்தில் எழுதிவிடலாம்!சிறுவயதில் இருந்தே அனாதையாக ஒருவித கடுமையான, இறுக்கமான சூழலில் வளர்ந்தவன்தான் ஜெயச்சந்திரன்.அதனாலேயே அவன் அதிகமாக பேசுவதில்லை.ஒன்லி ஆக்ஷன்!

           2002  ல்  தாதா  சீசன்  ஆரம்பித்தது.அஜித்தின்  ரெட்,விக்ரமின்  ஜெமினி,சூர்யாவின்  ஸ்ரீ, விஜயின்  பகவதி ஏன்  ரசினியின்  பாபா  கூட  தாதா  சீசனில்  வந்தபடம்தான்.அதன்பின்  காதல்  கொண்டேன்  துவங்கி  சைக்கோ  சீசன்  வந்தது.சிம்புவின் மன்மதன்  வந்தது.சிகப்பு  ரோஜாக்கள்  சாயல் ஓவராக  இருந்ததாலேயே  எனக்கு  அப்படம்  பிடிக்கவில்லை.தவிர  மொட்டை  சிம்புவின்  ஓவராக்டிங்  கொடுமை  வேற! தாதா  off season  சமயத்தில்  வந்ததுதான்  தொட்டி  ஜெயா.

                    துவக்க  காட்சியான  "முத்து கணேஷ்  யாரு?" மறக்க  முடியாத  காட்சி!நயீவான  நாயகி  தாதா  ஹீரோன்னு  வழக்கமான  கதைதான்.இன்னும்  சற்று  உற்று  கவனித்தால்  இப்படத்தின்  கதையும்  ஷாம்  நடித்த  பாலா (2002) படத்தின்  கதையும்    ஒன்றுதான்.அதில்  ரகுவரனிடம்  அடியாளாக  இருக்கும்  ஷாம் ரகுவரனின்  இரண்டாம்  மனைவியின்  மகளான  மீரா  ஜாஸ்மினை  லவ்வுகிறான்.அதற்கு  ரகுவரனின்  எதிர்ப்பு  அதைமீறி  சேர்ந்தார்களா?இல்லையா?  என்ற  கதைதான்.

          ஆனால்  அதில்  ஒரு  முக்கியமான  வேறுபாடு  உண்டு.ஷாம்  ஏன்  அப்படி  இறுக்கமான  அடிதடி  ஆசாமியாக  மாறினான்  என்பதற்கு  ஒரு  பிளேஸ்பேக்  இருக்கும்.தாய்  தந்தை  தங்கச்சின்னு  வாழ்ந்துவந்த  குடும்பத்தில்  சில  ரவுடிகள்  செய்யும்  வேலைகளால்  தங்கச்சி  தாய்  தந்தை  மூவரும்  இறந்துவிட அதற்கு  பழிவாங்கவே ஷாம்  அப்படியாக  மாறினார்  என்று  காட்டியிருப்பார்கள்.
       ஆனால்  இப்படத்தில்  சிம்பு  ஏன்  அப்படி  இறுக்கமான  இருண்மையான  தன்மை கொண்ட  ஒரு  கேரக்டராக  மாறினான்   என்பதற்கு  பெரிய  பிளேஸ்பேக்  சம்பவங்கள்  எதுவும்  காட்டப்பட்டிருக்காது.வாழ்க்கை அதன்  இயல்பான  தன்மையிலேயே  ஒருவனை  இறுக்கமான  ஆளாக  மாற்றிவிடக்கூடியது.அதற்கு  எந்த  நெஞ்சை  நக்கும்  பிளேஸ்பேக்கும்  அவசியமில்லை  என்பதுதான்  நிஜம்.
     


ஆர்டி ராஜசேகரின் மிகச்சிறந்த ஒளிப்பதிவு  இப்படத்தில்தான்!இருளுக்கும் ஒளியுக்குமாக    cat and mouse  விளையாடியிருப்பார்! முக்கால்வாசி  படம்  இருட்டிலேயே(மிஸ்கினுக்கு முன்னோடி துரை!) படமாக்கப்பட்டிருக்கும்.
                 டிஜிட்டல் கேமராவில்  இருளில் எடுக்கிறேன் பேர்வழின்னு  ஸ்க்ரீன்ல  சாணியடிச்சாப்ல  ஒருமாதிரி   சாம்பல்  கலர்ல  இருள்  காட்டப்படும்  இக்காலகட்டத்தில்  அப்படத்தை  பார்க்கும்போது  ஒளிப்பதிவில்  எவ்வளவு இழந்திருக்கிறோம்  என்பது  புலப்படும்.ஹாரிஸின்  தீம்  ம்யூசிக்  நன்றாகவே  பொருந்தியது(அது  காப்பியா  என்னான்னு  நமக்கு  தெரியாது).உயிரே  என்  உயிரே  பாடலை  குறிப்பிட்டு  சொல்லலாம்...

குறை என்றால் சிம்பு பேசவேண்டிய வசனங்களை சேத்துவச்சி பேசும் கொச்சின் ஹனீபா.அதிலும்

ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
  என்று  இம்போசிஷன்  சொல்லிகொண்டிருப்பது  கடுப்பை  கிளப்பும்.அதேபோல  வில்லனாக  வரும் பிரதீப்  ராவத் அந்த  கேரக்டரில்  கொஞ்சமும்  பொருந்தவில்லை.அதிலும்  "நம்ம  வூட்டாண்டையே  வன்ட்டானா?" ன்னு  சென்னை  தமிழ்  டப்பிங்  குரலுக்கும்  அவரின்  வாயசைப்பு +பாடி  லாங்குவேசுக்கும்  எந்த  தொடர்புமேயில்லை.
                   மற்றபடி  ஏற்கெனவே  சொன்னபடி  இது  நல்லதொரு  வணிக  சினிமா!

No comments:

Post a Comment