படத்தை இரண்டாவது முறை பார்த்தேன்.அதில் கண்ட சில விஷயங்கள்&தோன்றிய
எண்ணங்கள்.
இரண்டாவது முறை கண்டபோது
அப்பட்டமாக தெரிந்தது காலம் நேரம் இடம் அனைத்தும் skew செய்யப்பட்டுள்ளது.அற்புதமும்
மாணிக்கமும் சுனாமியில் தப்பித்தவர்கள்.வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணிக்கம்
ஷில்பாவாக திரும்புவது ஏழாண்டுகள் கழித்து.அப்போ அது 2011 ஆம் ஆண்டு.ஆனால் அந்த
விடலைகள் பார்க்கும் டிவி,பெர்லினின் மொபைல் எல்லாம் நவீன காலத்தவை.
அப்போ இந்த கதைகள் ஒரே
நாளில் நடக்கவில்லையா?அந்த விடலைகள் லோக்கல் தாதாவின் டிவியை உடைத்தததும் வேறொரு டிவியை எப்படியோ
வாங்கி அவன் வீட்டுக்கு எடுத்துட்டு போனதும் “ஒரே நாள்ல நாப்பத்தெட்டு இன்ச் டிவி
வாங்கிட்டோம்.நாளைக்கின்னா அம்பது இன்ச் டிவி கிடைக்கும்”னு சொல்லி அனுமதி
வாங்கிட்டு அந்த டிவியை தூயவனின் வீட்டுக்கு எடுத்து செல்கிறார்கள்.இங்க
மட்டும்தான் நாள் பற்றிய குறிப்பு வருது.
ஆனா பெர்லின் திடீர்னு
பட்டு வேட்டி சட்டையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான்.கொஞ்ச நேரம் கழித்து
யூனிபார்ம் அணிந்து நிற்கிறான்,பேரலலா முகிலன் வேம்புவை வேற மப்டில கண்காணிக்கிறான்.இவை அனைத்து ஒரே
நாளில் சாத்தியமா?என்ற கேள்வியும் இருக்கு.
மற்றொன்று படத்தின்
பிற்பகுதியில் பெர்லின் முகிலன் வேம்புவை ஒரு பழைய பேக்டரி மாதிரியான இடத்தில்
வைத்து மிரட்டுகிறான்.அந்த விடலைகள் உடைந்த டிவியை தூக்கி எரிவதோ அவர்கள்
குடியிருப்புக்கு வெளியே.அது இங்கே விழுகிறது.
அதுபோல ஷில்பா தனது மகனை
பள்ளிக்கு அழைத்து செல்லும் வழி என்பது எந்த ஊர் எந்த இடம் என்பதுபற்றிய எந்தவித
தெளிவான அடையாளங்களும் இல்லாத ஒருவித surrealistic இடமாகவே தெரிந்தது.அப்புறம் ஷில்பாவும் தனசேகரும் சந்தித்துக்கொள்ளும் சப்வே(அந்த காட்சியை இரண்டாம் முறை பார்த்த போதும் அதே வீரியத்தோடு இருந்தது).குறிப்பாக விளக்கு மின்னி மின்னி அணையும் அந்த டைமிங்கை ஏற்கெனவே முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள்.அற்புதம்!
அப்புறம்
விளக்கமளிக்கமுடியாத சில நிகழ்வுகள். லிப்டுல கரண்ட் போனதும் வேம்பு கரண்ட் வரும்
என்கிறாள்.”ஆமா நீ பெரிய பத்தினி!சொன்னதும் நடந்துட போவுது”னு முகிலன் அலட்சியமா சொல்லி முடித்ததும் கரண்ட் வருகிறது.அதுபோல
காவல் நிலையத்தில் ஷில்பா பெர்லினின் தலையில் அடித்து சபிக்கிறாள்.பிறகு
பெர்லினின் தலையில் அடிபட்டே இறக்கிறான்.
ஷில்பா ஒரு திருநங்கை
என்றதும் அவர் மீது கழிவிரக்கம் வரும்படியான செண்டிமெண்ட் காட்சிகள் எதையும்
இயக்குனர் வலிந்து வைக்கவில்லை.இன்னும்
சொல்லப்போனால் ஷில்பாவும் ஒருவிதத்தில் பெரும் குற்றத்தில் பங்கு வகித்தவளாகவே
காட்டப்படுகிறாள்.இரண்டு குழந்தைகளை யாரிடமோ கொடுத்ததாகவும் ஒரு வாரம் கழித்து
ட்ராபிக் சிக்னல்ல அவர்கள் இருவரும் கண் பார்வை இழந்து கை கால் ஒடிந்த நிலையில்
பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் சொல்கிறாள்.ஆக அவளுமே பாவத்தில் பங்கு வகிக்க
தயங்கவில்லை.
வேம்பு முகிலன் இடையேயான
உரையாடல்கள் அப்பட்டமான கணவன் மனைவி உரையாடல்களை ஒத்திருந்தது.மிகையான சக்கரை பூச்சோடு பார்த்ததும் காதல் பிறகு எப்படியாவது ஹீரோயினியை வற்புறுத்தி திரும்ப காதலிக்க வைப்பது பிறகு காதலின் வெற்றி பிறகு கல்யாணம்.அதன் பிறகு they happily lived ever after என்றுதான் 99%
தமிழ் படங்கள் முடியும்.இதில் அந்த மாய தோற்றங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
மூன்று தம்பதிகளின் கதையே
இங்கு பிரதானம்.சமீபத்தில் திருமணமான முகிலன்—வேம்பு,திருமணமாகி ஏழு வருடங்கள் ஆனா
மாணிக்கம்-ஜோதி,பதினேழு பதினெட்டு ஆண்டுகள் ஆனா தனசேகர்-லீலா.மூன்று தம்பதிகளுமே
மகிழ்வான வாழ்க்கையை வாழவில்லை.
இரண்டாம் முறை
பார்த்தபோதும் பல காட்சிகளின் தேவையற்ற நீளத்தை உணர முடிந்தது.அப்புறம் அவ்வப்போது
ஒலிக்கும் ராசைய்யாவின் பாடல்கள்(ஆரம்பத்தில் வரும் ஐயம் ஏ டிஸ்கோ டான்சர்
தவிர்த்து) ஒருவித வினோத உணர்வை தந்தது.ஷில்பா உடைமாற்றும்போது ஒலிக்கும்
மாசிமாசம் பாடல், வனிதாமணி பாடலில் ஆண் குரலுக்கு மட்டும் வாயசைக்கும் தூயவன் என்று இப்பாடல்களை தனியே கேட்டால் அந்த
காட்சிகள் நினைவுக்கு வரும் என்கிற அளவுக்கு பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.அப்புறம்
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் பின்னணியில் ஒலித்த அந்த அரவை இயந்திரம் போன்ற
அந்த ஒலியை மறக்க முடியாது.
படத்தின் color tone நன்றாக
இருந்தது.படத்தின் கதைக்களன் போலவே அதுவும் ஒருவித dreamy தன்மை கொண்டதாக
இருந்தது.
இப்படம் ஒன்றிரண்டு
வருடங்கள் கழித்து எப்படி இருக்க போகுதுன்னு என்னால யூகிக்க முடியல(இப்பவே
இரண்டாம் முறை பார்த்தபோது வேறு அனுபவமாகவே இருந்தது).இப்போது இருப்பதை காட்டிலும்
சிறந்த படமா தெரியலாம்.அல்லது இப்போது கண்டதை விட மோசமான அனுபவமாகவும் அமையலாம்.
No comments:
Post a Comment