Friday 27 May 2022

விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்

                     தலைப்பை படித்ததுமே நமுட்டு சிரிப்பு/அட ஆமால்ல! என்ற எண்ணம் வந்தால் நாம் வியப்படைய மாட்டோம்! காரணம் மீடியா மற்றும் தமிழ் சினிமாவை சார்ந்த சில நடிகர்களே. மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி ஒருமுறை "அரசியல்ல punching bag ஆக விஜயகாந்த்தை திட்டமிட்டே மாற்றிவிட்டனர்" என்றார்.ஒருவகையில் சினிமாவிலுமே அது நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

                  என்னமோ விஜயகாந்த் நடித்த நூற்று அறுபத்து சொச்சம் படங்களிலுமே கையில் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துக்கொண்டிருந்தார் என்பதுமாதிரியான ஒரு பிம்பம் உண்மையா என்று பார்ப்போம்! விஜயகாந்த் நாயகனாக நடித்த சட்டம் ஒரு இருட்டறை  துவங்கி இறுதியாக அவர் நடித்த விருதகிரி வரையில் கிட்டத்தட்ட 90% படங்களை திரையரங்கில் பார்த்த வகையில் நம்மால் சில விஷயங்களை உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் அழிக்கும் வகையிலான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

                                -தாயகம் படம்தான் அதற்கு ஆரம்பம்.அதில் மன்சூர் அலிகான் கேரக்டர் (வினோதமான மேக்கப்பில்) காஷ்மீரை தனியாக பிரிக்க சில சதிவேலைகள் செய்வார்.அதை கேப்புடன் தடுப்பதாக கதை செல்லும். 

-பிறகு எல்லாரும் troll செய்யும் முதல் படமான வல்லரசு.வாசிம் கானை பிடிக்க கேப்புடன் மேற்கொள்ளும் முயற்சிகள் பிடித்த பின்னர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்நாட்டிலேயே இருக்கும் துரோகிகள் என்பதாக கதை செல்லும்.

-அடுத்தது மிக அதிகமாக troll செய்யப்பட்ட கேப்புடன் படம் என்ற பெயரை பெற்ற நரசிம்மா.அதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்தபடி இங்கே சதிவேலை செய்வோரை கண்டுபிடித்து அழிப்பதாக கதை செல்லும்.இதில் வரும் சில சாகச காட்சிகள்(கரண்ட் ஷாக் கொடுக்கும் காட்சி) சமூக வலைதளங்கள் வளர ஆரம்பித்தபோது அதிகமாக troll செய்ய பயன்பட்டன.இதைவிட பல சாகச காட்சிகளில் ரஜினி(ஊர்க்காவலன் காலில் கயிறு கட்டி எதிர்முனையில் ஜீப் நகர மறுக்கும் காட்சி சிறு உதாரணம்) கமல்(விக்ரம் படத்தில் ஆகாயத்தில் இருந்து விழும் கமல் டிம்பிள் கபாடியாவை லாவகமாக பிடித்து தரை இறங்கும் காட்சி) போன்றோர் நடித்திருந்தாலும் ஏதோ விஜயகாந்த் மட்டுமே இப்படியெல்லாம் செய்வதாக ஒரு பொய் பிம்பம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது.

நமக்கு கேப்புடன் பட சண்டைக்காட்சிகளின் தரம் வீழ்ந்தது பற்றி கடும் விமர்சனங்கள் உண்டு.புலன் விசாரணை, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன், கருப்பு நிலா, ஆனஸ்ட்ராஜ் ,சத்ரியன்...etc..etc.., என்று அற்புதமான- யதார்த்தமான- உக்கிரமான சண்டைக்காட்சிகள் கொண்ட கேப்புடன் படங்கள் எத்தனையோ உண்டு.

 


               ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் (அலெக்சாண்டருக்கு பிறகு) அதிகமாக ரோப் ஷாட்களை வைக்க ஆரம்பித்தார் கேப்புடன். சமந்தமே இல்லாமல் காற்றில் பறப்பது(ராஜ்ஜியம் பட கிளைமேக்ஸ்) மீசையை சுண்டி விட்டதும் எதிரிகள் பறந்து போய் தூர விழுவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றதை மறுக்கவில்லை.ஆனால் அதே காலகட்டத்தில் வந்த மற்ற ஹீரோக்கள் படங்களிலும் அதே அளவு சாகசங்கள் இருந்தன.அஜீத் விஜய் போன்றோர் படங்களிலும் இன்றுவரையில் அதுபோன்ற காட்சிகள் உண்டு.ஆனால் அவர்கள் என்றும் கேப்புடன் ஆரம்ப காலங்களில் நடித்த அளவுக்கு உக்கிரமான சண்டை காட்சிகளில் நடித்தவர்களில்லை! 

                                 இன்று விஷால் சண்டைக்காட்சியில் நடித்தபோது "முழங்கையில் லேசான கீறல்" என்பதையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  அங்கலாய்த்து பேசும் நிலைதான் உள்ளது.கேப்டன் பிரபாகரன் சண்டைக்காட்சி படமாக்கலின் போது கை மூட்டு கழண்டு போன கேப்புடன் பற்றியோ கருப்பு நிலா படத்தில் ரோப் எதுவும் இல்லாமலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கியபடி நடித்ததையோ எவரும் பேசியதில்லை. 

                                          ஒரு பழைய ஸ்டன்ட் மாஸ்டரை பேட்டி எடுத்தாலும் "நீங்க ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் ,கமலுடன் பணியாற்றிய அனுபவம்" என்றுதான் கேட்பார்களே தவிர கேப்புடனுடன் பணியாற்றிய அனுபவங்கள் அவர் எதிர்கொண்ட விபத்துகள் எலும்பு முறிவுகள் பற்றியெல்லாம் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அதற்கு ஏற்கெனவே உண்டாக்கி வைத்த ஒரு பொதுபிம்பம் தடையாக உள்ளதை மறுக்க முடியாது. இதில் அபத்தத்தின் உச்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தனது படத்தில் தொடர்ந்து தீவிரவாதியாக காட்டியதால் அந்த சாபத்தால் இன்று கேப்புடன் உடல் நலிந்து போய்விட்டாராம்.என்ன அபத்தம் இது?ஒரு பொய்யான பொதுபிம்பம் கட்டமைப்பதால் எந்தளவு வக்கிரமான கருத்துக்கள் வருகிறது என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

                                                 இதில் மற்றொரு குற்றவாளி சினிமா துறை சார்ந்த சில நடிகர்களே!! விவேக் காமெடிகளில் தொடர்ந்து கேப்புடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிப்பதையே வேலையாக கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தனது வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைத்தார்(விஸ்வநாதன் ராமமூர்த்தி,அலை போன்று பல படக்காட்சிகளை சொல்லலாம்). 

                         சத்யராஜ் மகாநடிகன் படத்திலும் "ஆத்தா ஆடு வளர்த்துச்சு கோழி வளர்த்துச்சு நாய் வளர்க்கல.ஏன்னா அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுடுவாங்க" என்று கேப்புடனை மிமிக்ரி செய்து பேசி இருப்பார். 

                            தமிழ் படம் 2 இல் வாசிம் கான் என்ற பேருக்கு வக்காலத்து வாங்கும் காட்சி வைக்கப்பட்டது. 

 மேலும் சினிமா துறையில் பல பத்தாண்டுகள் பழம் தின்று கொட்டை போட்டதாக சொல்லப்படும் தமிழ் டாக்கீஸ் மாறன் போன்றவர்களும் தீவிரவாதிகள் வரும் தற்கால தமிழ் சினிமா விமர்சனம் செய்யும்போது போகிற போக்கில் "இதெல்லாம் ஏற்கெனவே விஜயகாந்த் அர்ஜுன் அடிச்சு துவைச்ச கதை தான்" என்று அடிச்சு விடுவதும் நடந்து வருகிறது .

                          உண்மையில் இம்மாதிரியான அபத்த காட்சியமைப்புகள் வசனங்கள் குற்றச்சாட்டுக்கள் போன்றவைகளுக்கு கேப்புடனோ அல்லது அவர் சார்ந்தவர்களோ என்றுமே மறுத்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவே இல்லை என்பது இந்த வதந்தி மன்னர்களுக்கு வசதியாக போய்விட்டது! இதேபோன்று ஊடகங்களால் ஒரு பொதுபிம்பம் மேலே திணிக்கப்பட்ட மற்றொரு நடிகர் ராமராஜன்.அவர் பற்றி முன்பு எழுதிய பதிவு இதோ

 

                இறுதியாகதிரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டினால் இங்கு கொந்தளிக்கும் சிலரின் கவனத்திற்காக ஒரு கொசுறு தகவல்:

          பாகிஸ்தானில் அப்துஸ் ஸலாம் என்ற பேரில் ஒரு இயற்பியல் விஞ்ஞானி இருந்தார்.அவரின் பெரும் பங்களிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.1996 இல் அவர் இறந்தபிறகு அவரது கல்லறையில் "the first Muslim Nobel laureate"என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.ஆனால் அவர் அஹமதியா பிரிவை சார்ந்தவர் என்பதால் அவரை இசுலாமியர் என்று ஏற்றுக்கொள்ளாத   மாற்றுப்பிரிவை சார்ந்தவர்கள் கல்லறையில்  இருந்த 'முஸ்லிம்' என்ற வார்த்தையை அழித்துவிட கல்லறையில் மிஞ்சிய வாசகம் "the first  Nobel laureate" என்பதே!

        

No comments:

Post a Comment