அந்த வகையில் இப்படம் சூப்பர்ஹீரோ லாஜிக்கில் இருந்து பெரிதாக விலகாமல் எடுக்கப்பட்டுள்ளது.கொஞ்சம் விலகி இருக்கிறார்கள்.நோலன் பேட்மேன் சீரிஸ் எடுக்க ஆரம்பித்த போது பேட்மேன்- உணர்வு சிக்கல்களுக்கு ஆட்பட்ட- சாமானிய மனித பலகீனங்களுக்கு உட்பட்ட- ஒரு சாதாரண மனிதன் போலத்தான் என்று மெலிதாக போட்ட கோட்டை இதில் கொஞ்சம் பெரிதாக போட்டுள்ளார்கள்.
உதாரணமாக பேட்மேன் மிக உயர கட்டிட உச்சியில் இருந்து குதிக்கும்போது batsuit ஒரு சிறு பாலத்தின் அடியில் சிக்கி ரோட்டில் தடுமாறி விழுவதாக ஒரு காட்சி வரும்.அதேபோல பட துவக்கத்தில் கொலையாகி இருக்கும் மேயரின் பிரேதத்தை ஆய்வு செய்ய பேட்மேன் வருவதற்கு அங்குள்ள காவல் அதிகாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.பிறகு ஜேம்ஸ் கோர்டன் சொல்கேட்டு அவர்கள் அமைதியாகிறார்கள்.ஆனால் இந்த விதிமீறல் காட்சிகள் இவ்வளவே!மற்றபடி ஒரு சூப்பர் ஹீரோ படத்தை போலவே செல்கிறது.
இதில் மற்றொரு மிக சிக்கலான விஷயம் ப்ரூஸ் வெய்னின் பெற்றோர்களை கொன்றது யார்?என்ற கேள்வி!ஒவ்வொரு படத்திலும்- சமீபத்தில் வந்த Gotham தொடரிலும் ஒவ்வொரு மாதிரி கொலையாளியை காட்டிக்கொள்கிறார்கள்.Batman Begins இல் ஒரு சாதாரண வழிப்பறி திருடன்,சில கதைகளில் அது ஜோக்கர்(பேட்மேன் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான Bob Kane இதைத்தான் விரும்புகிறார்) என்றும் இந்த படத்தில் வேறொரு மாதிரியும் காட்டி உள்ளார்கள். இப்படத்தில் ப்ரூஸ் வேய்னின் பெற்றோர்களான தாமஸ் வெய்ன்-மார்த்தா வெய்ன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பிற சினிமா/சீரிஸ்களை விடவும் முற்றிலும் வேறுமாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒருவித இருண்மையான வடிவமைப்பு.
Gotham தொடர் பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இடையில் இப்படத்தை பார்க்கும் போது சில குழப்பங்கள் எதிர்பார்த்தபடி வந்தன.Riddler கேரக்டர், ப்ரூஸ் வெய்ன் வயதை ஒத்த ஆளாக இதில் காட்டப்பட்டுள்ளார்.காதம் தொடரில் ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருந்த போது காதம் காவல் நிலையத்தில் தடயவியல் துறையில் பணியாற்றுபவராக ரிட்லர் காட்டப்பட்டிருப்பார்.இப்படத்தில் பெங்குயின் கதாபாத்திரத்துக்கு காதம் தொடரளவு முக்கியத்துவமான காட்சிகள் நிறைய இல்லை.ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் பெங்குயினால்தான் வருகிறது.
வெப்சீரிஸ் சினிமா இரண்டும் வெவ்வேறு அவகாசத்தில் பயணிக்கும் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.சீரிஸில் கொஞ்சம் நிதானமாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அவரவர் பின்னணிகளை தனித்தனி எபிசோடுகளாக காட்டலாம்.சினிமாவில் அதை செய்ய முடியாது.
படத்தில் அட்டகாசமான இரண்டு அம்சங்கள் இசை மற்றும் ஒளிப்பதிவு.படத்தை பார்ப்பதற்கு முன்பிலிருந்தே படத்தின் பின்னணி இசையை கேட்டு பழகியதால் படத்தின் தொனி இன்னதாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே கதைக்குள் பயணிக்க முடிந்தது.குறிப்பாக Riddler கதாபாத்திரத்துக்கான தீம் . ஒளிப்பதிவு என்பது Arkham Asylum &Arkham City ஆகிய வீடியோ கேம்களை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது.படத்தில் ஒருவித பழுப்பு tone கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
பேட்மேனின் உளவியல் சிக்கல்களை குழப்பங்களை மனப்பாரங்களை நோலன் ஏற்கெனவே ஓரளவு தொட்டிருந்தாலும் இதில் அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக இருண்மையான தொனியில் எடுக்கப்பட்டது சிறப்பு.
இதில் பிடித்த விஷயங்கள் மேலும் சில. சாதரணமாக தற்கால படங்களில் கணினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் கணினியின் மானிட்டர் திரையில் க்ரீன் மேட் போட்டு பிறகு அதில் சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ கிராபிக்ஸ் சுழன்று கொண்டிருப்பதாக காட்டும் அபத்தம்(விவேகம் படத்தில் ஸ்பைடர் படத்தில் பார்த்தால் உங்களுக்கு புரியும்) இதில் இல்லை.மினிமலிஸ்ட்டிக் ஆக சாதாரண Line user interface மட்டுமே ரிட்லர் உடனான பேட்மேனின் கணினி உரையாடல் நிகழ்கிறது.ஏற்கெனவே ஜான் விக் படத்தில் அத்தகைய யுக்தி பிரமாதமாக இருந்தது.Keep it simple!
தவிர ப்ரூஸ் வெய்ன் பயன்படுத்தும் கார் ஒருவித எண்பதுகளின் எபெக்டை தருவது ;நோலன் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட Batpod வடிவமைப்பு அதன் செயல்பாடுகள் இவை எல்லாம் படத்தில் ரொம்ப நுட்பமாக பார்த்து செய்திருந்ததால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆகியுள்ளது.படத்தின் டைட்டில் டிசைன் நன்றாக இருந்தது.
ராபர்ட் பேட்டின்சன் டுவைலைட் என்ற படுசுமாரான படங்களின் நிழலில் இருந்து வெளியே வர கடுமையாக போராட வேண்டியிருந்தது.இப்போதும் அவரை ஒரு நல்ல நடிகர் என்று உலக விமர்சகர்கள் பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அதில் அவரின் கதாபாத்திரம் எல்லாமே இதுவரை நன்றாக அமைந்து வந்துள்ளது.ஹாரி பாட்டர் மாயவலையில் இருந்து வெளியே வரமுடியாமல் இன்றுவரை தவிக்கும் டேனியல் ரேட்கிளிப் மாதிரியல்லாமல் இவர் டுவைலைட் மாய பிம்பத்தில் இருந்து எப்போதோ வெளியே வந்துவிட்டார்.
காதம் என்பது ஒரு கற்பனை நகரம் என்று சொன்னாலும் இன்றைய உலகம் என்பதே ஒரு மாபெரும் காதம் போலத்தான் இருக்கிறது.படத்தில் மேயர் ,District Attorney காவல் ஆணையர் தொடங்கி அத்தனை அதிகார மட்டமும் புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது.அந்த அழிவை, பொய்களை, சீர்கேட்டை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் வேலையைத்தான் ரிட்லர் செய்வதாக கதை செல்கிறது.அதைத்தாண்டி அடுத்த மேயராக வரப்போகும் பெண் நல்லவராக காட்டப்படுகிறார்.சினிமாவிலாவது இப்படியான நல்ல அதிகார வட்டத்தை பார்க்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! :D
நோலன் படங்களில் ஜேம்ஸ் கார்டன் கமிஷனர் ஆக இருப்பார்.இதில் லெப்டினென்ட் ஆக வருகிறார்.ஒருவகையில் இது காதம் தொடரின் கதைக்கும் நோலன் காட்டிய கதையின் காலகட்டத்திற்கும் இடைப்பட்டதாக நாம் காண்கிறோம்!காதம் தொடரில் கார்டன் ஒரு சாதாரண டிடெக்டிவ்.அப்போது ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருப்பான்.பட்லர் ஆக இருக்கும் அல்ப்ரெட் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெரிய வேலையில்லை என்றாலும் செலினா கய்ல் எனும் கேட் வுமனுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது.இதையே பல விமர்சகர்கள் மிக நீளம் என்று அங்கலாய்த்திருப்பதை கண்டேன்.நம்மை பொறுத்தளவில் மூன்று மணி நேர படமோ அல்லது மூன்னூறு மணி நேர வெப் சீரிஸோ நீளம் முக்கியமல்ல!படம்/சீரிஸ் பார்க்கும்போது "என்னடா இது!இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கு?" என்று பார்க்க வைக்காமல் இருப்பதே ஒரு இயக்குனருக்கு வெற்றி என்று கருதுகிறேன்.அவ்வகையில் நமக்கு இப்படம் நீளமாக தெரியவில்லை!
படம் முடியும் தருவாயில் ஆர்க்கம் அசைலமில் இருக்கும் ரிட்லர் உடன் இன்னொரு மிகப்பெரிய பேட்மேன் வில்லன் கதாபாத்திரமொன்றை காட்டுகிறார்கள்.அந்த கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்க போகிறார்கள்.அதை வைத்துக்கொண்டு இரண்டாம் பாகத்தை எப்படி கொண்டுபோக போகிறார்கள் என்பதில்தான் இயக்குனர் மேட் ரீவ்ஸ்க்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment