Trance படம்(படத்தை மூன்றாவது முறையாக பார்த்தோம்) மத மோசடிகளை மட்டுமே பேசுகிறது என்று நினைப்பவர்கள் அப்படத்திற்கு துரோகம் இழைக்கிறார்கள்.முதல்முறை பார்த்தபோது நமக்கே அப்படித்தான் தோன்றியது!சரி, அதுவும் உண்டு என்றாலும் அதைத்தாண்டி அடிநாதமாக மையப்புள்ளியாக இருப்பது விஜு பிரசாத்(ஃபஹத்)தின் மனப்பிறழ்வுகள்.சாதாரணமாக ஒவ்வொரு முறையும் அதீத mood swing கில் கீழே போனால் மீண்டும் மேலே வரலாம்.ஆனால் பழைய கோட்டுக்கு பல படிகள் கீழேதான் புதிய கோடு இருக்கும்!ஸ்விங் என்று அழைக்கப்பட்டாலும் ஊஞ்சல் போல ஆரம்பப்புள்ளிக்கு என்றுமே செல்ல முடியாது!
தனது மரபணுவில் கல்வெட்டாக பதிவாகிவிட்ட தற்கொலை விழைவை ஒவ்வொரு முறையும் எதிர்கொண்டு அதைத்தாண்டி வருதல்,தனது தம்பியின் நியாபகம்,தாய் மற்றும் தம்பி போல தானும் ஆகிவிடக்கூடாது எனும் உறுதி-அந்த உறுதியும் பலநேரம் ஆட்டம் கண்டுவிட மீண்டும் தன்னைத்தானே கைபிடித்து தூக்கி நிறுத்தும் முயற்சிகள்,சில மருந்துகளால் கடந்தகால ஆறாத்தழும்புகளை மனதின் பார்வையில் இருந்து திரை போட்டு தற்காலிகமாக மறைக்க முடிந்தாலும் அது உள்ளே ஏற்கெனவே உண்டாக்கிய கடும் அதிர்வுகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்று நுட்பமான பல உளவியல் போராட்டங்களை படம் சொல்கிறது.
குறிப்பாக பல வருடங்கள் கழித்து விஜூ மீண்டும் தனது வீட்டுக்கு செல்லும் காட்சி.தெரபி என்பதில் கடந்தகால அவலங்களை மீண்டும் அணுகி ஆராய்வது ஒரு முக்கிய பகுதியாக இருக்கும்.ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல.அப்படியே தட்டு தடுமாறி சிறிதேனும் அந்த நிகழ்வுகளை அணுகி ஆராய்ந்திருந்தாலும் அது முடிந்த பின் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாது!
அதை உணர்த்தும் விதமாக தனது பழைய வீட்டின் படிகள் சிலவற்றை ஏறியதும் அதற்குமேல் போக முடியாமல் தடுமாறி அமரும் காட்சி இருக்கும்.விஜூ பிரசாத்தை பொறுத்தவரையில் அது செங்கல் சிமெண்ட் வைத்து கட்டப்பட்ட வெறும் வீடு மட்டுமல்ல.தனது தாய் தம்பி மரணித்த இடம்.தனது இடைவிடாத உளவியல் போராட்டங்கள் நடந்த இடம்,ஒருவகையில் தாய் தம்பி மற்றும் தனது இடைவிடாத சொந்த ஆழ்மன அலறல்கள் இவைகளின் மொத்த தொகுப்புதான் அந்த வீடு.அதனாலேயே அவனால் படியேறி வீட்டுக்குள் செல்ல முடிவதில்லை.என்றுமே அவனால் அந்த வீட்டிற்குள் போகவே முடியாது!
இப்படத்தை முதலில் பார்த்தபோது அதிர வைத்தது படத்தின் title track!போதைப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகளை விட்டுவிடுவோம். Prescription உளவியல் மருந்துகள் உள்ளே ஏற்படுத்தும் விவரிக்கவே முடியாத பல உணர்வுகளை அப்படியே அந்த ட்ராக் வெளிப்படுத்தி இருந்தது!
குறிப்பாக டைட்டில் ட்ராக் ஆரம்பத்தில் வரும் ஒரு பெண்ணின் ஹம்மிங் அதிஅந்தரங்கமான ஒரு(மேற்சொன்ன) அனுபவத்தை அம்பலப்படுத்தியது போல கடும் அதிர்ச்சியை தந்தது .இந்த ட்ராக்கை உருவாக்கிய விநாயகனின் சட்டையைப்பிடித்து உலுக்கி "இது எப்படிய்யா உனக்குத்தெரியும்??" என்று கேட்கத்தூண்டியது!
"விநாயகன் இவ்வளவு அசாத்திய இசைத்திறமையை ஏன் வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிக்கிறார்??ஒழுங்காக நடித்து ஒழுங்காக இசையமைத்து கொண்டிருக்காமல் ஏன் ஏகப்பட்ட சர்ச்சைகளில்(விக்கிபீடியாவில் இவரது படங்களின் பட்டியலைவிட சர்ச்சைகளின் பட்டியல் அதிகம்)சிக்குகிறார்?" என்றெல்லாம் நாம் கேட்க மாட்டோம்.அவர் அப்படி எந்த ஒரு புள்ளியிலும் நிலைகொள்ளாமல் இருப்பதாலேயே மேற்சொன்ன அந்த அதி அற்புத டைட்டில் ட்ராக்கை உருவாக்க முடிந்தது!
பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடலின் ஆன்மாவை பிரதிபலிக்கும்!
அதிலும் இந்த ட்ராக் மிக்ஸிங் + ஒலித்தரம் எல்லாம் அறிவுஜீவி பிரகாசு போன்றோர் பாடமாகப்படிக்க வேண்டிய அளவில் இருக்கிறது!
No comments:
Post a Comment