Friday, 27 December 2024

Udayananu Tharam

 படத்தில் பட இடங்களில் "மலையாள சினிமாவை சீரழிப்பதே இவர்கள்தான்" என்று பொருள்படும் விதத்தில் வசனங்கள் வருவதை கேட்டிருக்கலாம்.
  வெறுமனே இப்படத்தை பார்த்தால் "எதுக்கு இந்த கொந்தளிப்பு?" என்று தோன்றும்.ஆனால் இந்தப்படம் வந்த பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தான் அது புரியும்.



   ஆசான் எழுதிய இந்தப்பதிவு அதன் பின்னணியை தெளிவாக உணர்த்தும்.தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் வீழ்ச்சி துவங்கியதாக குறிப்பிடுகிறார்!வளைகுடா பணத்தினால் நடுத்தர வர்க்கம் திரை அரங்கத்திற்கு வருவதை நிறுத்தி வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வைத்து படம் பார்க்க துவங்கியதால் ஏற்கெனவே சிறிதாக இருந்த மலையாள திரையிடல் பரப்பளவு மேலும் குறைந்துவிட மீதமிருக்கும் ரசிகர்களை திரையரங்கிற்கு இழுக்க மம்மூட்டி மோகன்லால் பிரித்விராஜ் போன்றோர் ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பேரை புரட்டி எடுக்கும் காட்சி,ஆகாயத்தில் மிதத்தல்,வெளிநாட்டில் டூயட் என்றெல்லாம் திசை மாறியதாக சொல்கிறார்.

 

          குறிப்பாக மலையாள பார்வையாளர்கள் ஆங்கிலப்படங்கள் மற்றும்  தமிழில் உருவாக்கப்படும் அதீத பட்ஜெட் படங்களில் உள்ள தொழில்நுட்ப உச்சங்களால் கவரப்பட்டதாகவும் சொல்கிறார்.இங்கு பப்படம் ஆன குருவி கூட அங்கே பெரிய hit ஆகி இருக்கிறது. மணிச்சித்திரதாழ் படத்தை விட நான்கு மடங்கு சந்திரமுகி வசூல் செய்துள்ளது!



      இத்தகைய பின்னணியிலேயே இந்த படத்தை பார்க்க வேண்டும்!ஒருவகையில் இப்படத்தில் நடித்த மோகன்லால் மீதான விமர்சனமாகவும் இப்படம் உள்ளது!காரணம் அவருமே இந்த சீரழிவில் ஒரு பங்கு வகித்தவர்.மம்மூட்டியும் அவரும் தவிர்க்க முடியாத காரணத்தால் அத்தகைய படங்களில் நடிக்க வேண்டிய சூழலை இப்படம் விமர்சிக்கிறது.
     



சரோஜ் குமார் நடிக்கும் வணிக படங்கள் பெருவெற்றி பெற்று அவர் திடீர் உச்சம் தொடுவது கூட அப்போதைய மலையாள சினிமா சூழல் மீதான; ரசிகர்களின் ரசனை மீதான நையாண்டி தான்!
    எழுத்தாளர்கள் வசம் இருந்த மலையாள சினிமா தொண்ணூறுகளில் விலகி இரண்டாயிரங்களில் முற்றிலும் வணிகமயமாக ஆகிறது. கலைப்படம் -இடைநிலை சினிமா- வணிக சினிமா பேதங்கள் போய் எல்லாமே அனல் பறக்கும் பின்னணியில் ஹீரோ எதிரிகளை பந்தாடும் கதையாக மாறுகிறது.

    ஆனால் 2010 களில் இந்த நிலை மாறிவிட்டது.இதை ஆசான் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் [ஆசானின் நேரடி/மறைமுக பங்களிப்புடன் வந்த சில தமிழ்ப்படங்களை விடவும் அவை மேலான தரத்தில் தான் உள்ளன.குறிப்பாக சமீப காலத்தில் அவர் புகழும் அந்த புரட்சி இயக்குனர் எடுத்த மோவாயிச (வார்த்தை உதவி - அதே ஆசான்தான்) படங்களை விட பல நூறு மடங்கு மேலான நிலையில் தான் தற்கால மலையாள சினிமா உள்ளது]அதான் நிஜம்.அவர் தற்கால மலையாள சினிமாவை ஏற்க மறுக்கிறார்.அது அவரது எண்ணம்.ஆனால் 2000களில் இருந்த மோசமான நிலை இப்போது இல்லை.அல்போன்ஸ் புத்திரன் வினீத் ஶ்ரீநிவாசன் போன்றோர் 2010களில் புது ரத்தம் பாய்ச்சியதன் பலனாக இப்போது தரமான பல படங்கள் மலையாளத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
 


       இது ஒருபுறமிருக்க இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்த அவலத்தை பற்றியும் சொல்லியாக வேண்டும்.தனஞ்செயன் ,ஶ்ரீநிவாசன் கேரக்டரில் விவேக்/வடிவேலு போடலாம் என்று சொன்னதை கேட்காமல் பிரகாஷ் ராஜே நடித்ததால் படம் பப்படம் ஆனது என்கிறார்.
 

அப்படி வேறு எவரை போட்டிருந்தாலும் படம் பப்படமாக தான் ஆகியிருக்கும்!
 இரண்டு காரணங்கள்.
- படத்தை இயக்கிய விஜி ஏற்கெனவே ராதாமோகன் படத்துக்கு வசனங்கள் எழுதியவர் என்ற காரணமோ என்னமோ இந்தப்படமும் 'ராதாமோகன்தனமாக'த்தான் இருந்தது.
வடிவேலு அசாத்திய திறன் கொண்ட நடிகர் தான்.அவருக்கான தனித்தன்மைகள் உண்டு.அவரைப்போல் மற்றொருவரை சுட்டிக்காட்ட முடியாதுதான்!ஆனால் இந்த கேரக்டருக்கு ஶ்ரீநிவாசன் போல ஒருவரை தமிழ் சினிமாவில் நம்மால் சுட்டிக்காட்ட முடியவில்லை!அவர்  தனித்தன்மை கொண்ட  ஒரு பன்முகக்கலைஞன்!

 

   மேலும் தமிழ் சினிமாவில் அப்போது(வெள்ளித்திரை வந்த 2008 களில்)  தலைபோகும் பிரச்சனை எதுவும் இல்லை. இப்போது அப்படத்துக்கான தேவை இருப்பதாக நாம் நினைக்கிறோம்.ஆனாலும் ஶ்ரீநிவாசன் செய்த கேரக்டரை செய்ய இப்போதும் ஆளில்லை!

No comments:

Post a Comment