தமிழ்ப்பட பித்தன் : டேய் பெரிய ஸ்காடா நீ?தமிழ்ல எவ்வளவோ உலக சினிமா வந்திருக்கு.அதைப்பத்தியெல்லாம் எழுத மாட்டியோ?வானத்துலேர்ந்து குதிச்சவனோ?
.
உதயா : ண்ணா. ...உலக சினிமா உளுந்தூர்பேட்டை சினிமா இதெல்லாம் நமக்கு கணக்கில்லை!நமக்கு பார்க்கணும்னு தோணனும்!பாத்தாலும் நாலு பத்தி தானா வரணும். அவ்வளவுதானுங்!
.
GOAT:
படத்துவக்கத்தில் இந்தமாதிரி இந்தமாதிரி கேரக்டர்கள் பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நம்பவைக்க இயக்குனர் ரொம்ப மெனக்கெட்டு உள்ளதுபோல தெரிந்தது.
உருப்படியான மசாலா படம் தமிழில் வந்து வருடங்கள் ஆகிறது என்ற குற்றசாட்டை கொஞ்சம் பொய்ப்பித்து உள்ளதை மறுக்க முடியாது.
அதிலும் விஜயை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி பிரச்சனை,நீட் பிரச்சனை, Vestibular shwannoma பிரச்சனை என்றெல்லாம் நீட்டி முழக்காமல் அடக்கி வாசிக்க வைத்தது(அல்லது அவரே அடக்கி வாசித்து விட்டது) பெரிய அதிசயம் தான்!
பெரிய உறுத்தலாக இருந்த விஷயங்கள் என்றால்:
- விஜயின் தோற்றம்.கத்தி படத்துக்கு பிறகு அவரின் தோற்றம் இயல்பாக இருந்து பார்த்ததாக நினைவில்லை! புலியில் தந்தை கேரக்டரின் தமாசு கெட்டப் தொடங்கி லியோ வரையில் ஹேர்ஸ்டைல் சரியில்லை தாடி சரியில்லை என்பதாக எதோ ஒரு குறை.
வயதான விஜயின் ஒட்டு தாடியை பிடித்து இழுக்க வேண்டும் என்ற பரபரப்பு இருந்தது!
தற்கால கெட்டப்பில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இயல்பாக பொருந்தி இருந்தனர்!ஆனால் அண்ணா???
ஜீவன் கேரக்டரின் கெட்டப் ருத்ரா பட கௌதமியை முன்மாதிரியாக வைத்து உருவாக்கியிருக்ிறார் போல!இடையில் பதின்ம வயது அண்ணா deep fake மூலம் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தார்!
- மற்றொன்று வயதான விஜயின் கண்ணாடி! சொதப்பியது ஸ்டைலிஸ்ட் ஆ? இயக்குநரா??
- அன்பறிவ் உருவாக்கிய சண்டைக்காட்சிகள் சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பெரும்பாலும் கிரீன் மேட் ரோப் ஷாட் என்பதாகத்தான் இருந்தது.குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி அண்ணாவின் வீட்டு மாடியில் கிரீன் மேட் போட்டு எடுத்து அதை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் என்பதாக மாற்றியது போலவே இருந்தது!சரி...பெரிய ஹீரோ பெரிய பட்ஜெட் என்றால் கொஞ்சம் பெரிய லெவல் சண்டை காட்சி இருக்கும்தான்.அதை ஒரு அளவில் நிறுத்தி கொள்ளுதல் நலம்.சும்மா ஹீரோ தரையில் நிற்பதை கூட கிரீன் மேட் போடவேண்டிய அவசியமில்லை!
- யுவனின் இசை: ஏற்கெனவே சென்ற பதிவில் குறிப்பிட்டது போல "பழைய beats மிஸ்ஸிங்"!
- பார்த்தேன் ரசித்தேன் ஜோடியை மீண்டும் கொண்டுவந்தவர்கள் அந்த படம் போலவே இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளாமலே கருத்துக்களை பரிமாறி கொள்வதாக காட்டி இருந்திருக்கலாம்! An ode to Saran!
- அன்புள்ள காதலுக்கு சுட்ட பழம் படங்களில் அப்பட்டமாக விக் என்று தெரியும் வண்ணம் அணிந்த மோகன் இப்படத்தில் விக் என்றே சொல்லமுடியாதபடி தோற்றமளித்தார்!
- கண்டிப்பாக தேர்தலுக்குப்பின் மீண்டும் அண்ணா நடிக்க வருவார்!
GOAT Vs OG எடுக்க வெங்கட் பிரபு தயாராகவே இருப்பார்.ஆனால் அதில் நடிக்க அண்ணா ஒப்புக்கொள்வாரா? என்பது கேள்வி.காரணம் இந்தியன் 2 வில் காசருக்கு விழுந்த தர்மடி இனி ஹீரோக்களை இரண்டாம் பாகம் நடிப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வைக்கும்!
****************************************************
ஒரு நொடி : Red herring என்பார்கள்.கொலையை இவர் செய்தாரா அவர் செய்தாரா? என்று பார்வையாளனை சுற்றலில் விட்டு பிறகு உண்மையான கொலையாளியை & கொலைக்கான காரணத்தை அம்பலபடுத்துதல்!இதில் ஏகப்பட்ட red herringகுகள்! படத்தின் இயக்குனர் வெற்றிமாறனின் ரசிகர் போல. எவன் மேல் சந்தேகம் இருந்தாலும் உள்ளே தள்ளி 'நெஞ்சுல மிதிலே விலாவுல குத்துலே ' தான்!கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக தோன்றியது .
மற்றபடி அந்த திருப்புமுனை தருணம் அம்பலமான போது நமக்கு நினைவுக்கு வந்தது Taking of Pelham 1974 படத்தின் கிளைமாக்சில் அந்த கேரக்டர் தும்மும் தருணம்!Achchooooooooo!
***************************************************
Black: Shrodinger அது இதுவென்று பூனை விட்டதற்கு ஃப்ரிட்ஜில் இருந்த கீட்டமினை கணவனும் மனைவியும் ஆளுக்கொரு மில்லி ஏத்திகினு ஒரு வாரம் தூங்கி இருந்திருக்கலாம்!எந்த பிரச்சனையும் இருந்திருக்காது!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் காவல் அதிகாரி லால் (ஷாஜி)மருத்துவமனைக்கு வெளியே கீட்டமின் பயன்படுத்திய மருத்துவ மாணவர் சந்த்ரு (ஶ்ரீ)கதாபாத்திரத்துக்கு எதிராக கடுமையாக மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி ஜீவா கண்முன் ஒடியிருக்க வேண்டும்!அதற்கு பயந்தே பயன்படுத்தவில்லை போல!படத்தை தொடர்ந்து பார்த்தால் புரியாதது போல இருக்கும்.ஆரம்பத்தை மட்டும் பார்த்து கிளைமேக்ஸ் பார்த்தால் புரியும்!நடுவுல கொஞ்சம் திரைக்கதையை காணோம்!
***************************************************
வசந்த முல்லை : மேற்சொன்ன படத்தில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதற்கு அவர்கள் சொன்ன காரணத்தை விட இந்தப்படத்தில் (கிட்டத்தட்ட அதே மாதிரி நிகழ்வுகள்) ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணம் லாஜிக்காக நம்பும்படி இருந்தது.படத்தில் ஒரு மெசேஜ் சொல்லிவிட வேண்டும் என்ற பரபரப்பு தெரிகிறது.
அதை தள்ளிவைத்து கொஞ்சம் பட்டி டின்கரிங் பார்த்தால் இதையே ஒரு அவல நகைச்சுவை படமாக மாற்றி விடலாம்(அவனவன் சொந்த வாழ்க்கையை விடவா சிறந்த அவல நகைச்சுவை இருக்க போகிறது? - கும்மாங்கோ)!"மவனே இன்னைக்கு உன்ன கஞ்சி காய்ச்ச போறாங்க!அதான் உன் விதி" என்ற தலைவரின் வசனம் இப்பட கதாபாத்திரத்துக்கு அட்டகாசமாக பொருந்தும்!
***************************************************
வேட்டையன் படத்தில் எதுவுமே சரியில்லை என்பதாக பலரும் பேசியும் எழுதியும் உள்ளதை கண்டு கோபம் வந்தது!கண்டிப்பாக சில உருப்படியான விஷயங்கள் இருந்தன.
- ரஜினியின் magnetic clip-on கண்ணாடி ஃப்ரேம்!ஜெயிலர் படத்தில் அவரது கண்ணாடி ஃப்ரேம் மிகச்சரியாக பொருந்தி இருந்தது போல இதிலும்!இந்த அதிர்ஷ்டம்/சரியான தேர்வு அண்ணாவுக்கு கோட்டில் அமையவில்லை!நம்மவர் படத்தில் காசர் flip type கண்ணாடி அணிந்தது அப்போது பேச்சு பொருளாக இருந்தது.அதில் அவர் முகவெட்டுக்கு ஏற்றாற்போல் oval வடிவ ஃப்ரேம் அணிந்திருப்பார்.துணிவு படத்தில் அஜீத் ஏழாங்கிளாஸ் மாணவன் அணியும் ஃப்ரேம் அணிந்துகொண்டு வந்தார்!
- ரஜினி கேரக்டர் பயன்படுத்திய Samsung Galaxy Flip 5 . அதிலும் குறிப்பாக cream வண்ண மாடல் அட்டகாசம்!
|
ஆமா இந்த படத்துக்கு ஃபஹத் பாசில் எதுக்கு??
|
எந்நேரமும் புரச்சி மோடில் இருக்கும்/இருப்பதாக காட்டிக்கொள்ளும் இயக்குனருக்கு இந்தளவு aesthetic sense இருக்க வாய்ப்பில்லை! ஸ்டைலிஸ்ட்/Art/Costume/உதவி இயக்குனர்கள் என்று யாரோ இருவர் சொன்ன யோசனையாகத்தான் இது இருக்கும்.அந்த ரசனைக்கார(ரி) நபர்களுக்கு பாராட்டுக்கள்!Good taste!
- செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி vaping செய்வார்!அதன்பின் இப்படத்தில் அபிராமி கேரக்டர் செய்வதாக காட்டியுள்ளார்கள்.அது சாதாரண vaping ஆ? essential oil vaping ஆ? என்று காட்டியிருக்கலாம்! வில்லி கேரக்டர் என்றாலே புகைக்க வேண்டும் என்ற அவசர முடிவு மட்டுமே தெரிகிறது. ஈரோ அவசர முன்முடிவு எடுத்ததை கண்டிக்கும் இயக்குனர் புகைப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் /கெட்டவர்கள் எல்லாரும் புகைப்பார்கள்,குறிப்பாக வில்லித்தனமான பெண்கள் என்ற க்ளீஷேவுக்குள் சிக்கியது ஏனோ??? (கிங்ஸ் லெவன் புகைப்போர் பாதுகாப்பு இயக்கமொன்று தேவை உதயா - கும்மாங்கோ)